மணலுக்கு மாற்றாக அடிசாம்பலை பயன்படுத்தி கட்டடம் கட்டி சாதனை படைத்த பொறியாளர்களுக்கு என்எல்சி தலைவர் பி.சுரேந்திர மோகன் பாராட்டு தெரிவித்தார்.
அனல் மின் நிலையங்களிலிருந்து, உலர்சாம்பல் எனப்படும் மிக நுண்ணிய துகள்கள் கொண்ட சாம்பல் மற்றும் அடிசாம்பல் எனப்படும் மணல் போன்ற அளவிலான துகள்கள் கொண்ட சாம்பலும் வெளியேற்றப்படுகின்றன. இவற்றில் உலர் சாம்பல், சிமெண்ட் மற்றும் செங்கல் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எவ்வித பயனுமின்றி இடத்தை ஆக்கிரமிக்கும் அடிசாம்பலை பயனுள்ள வகையில் உபயோகித்து, ஒரே நேரத்தில் இருவிதப் பயன்களைப் பெற, என்எல்சி கட்டுமானத்துறை மற்றும் ஆராய்ச்சித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.
அந்த வகையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து கூட்டுமுயற்சியில் ஒரு ஆய்வுத்திட்டம் மேற்கொள்ள, என்எல்சி நிறுவனம் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ரூ.45 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் தொழிலகம் மற்றும் கல்வியகக் கூட்டு முயற்சியாக நடைபெற்ற இந்த ஆய்வுப் பணி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடைபெற்று தற்போது வெற்றியடைந்துள்ளது.
இந்த ஆய்வில், அடிசாம்பலை மணலுக்கு மாற்றாக பயன்படுத்தி, பல்வேறு விகிதங்களில் சிமெண்ட் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் பிளாக்குகள் சோதனை முறையில் தயாரிக்கப்பட்டு அவற்றின் திறன் பரிசோதிக்கப்பட்டன. பிளாக்குகளின் பளுதாங்கும் திறனை அறிய அதை அழுத்தி, உடைத்தும், இதர தன்மைகளைக் கண்டறிய நவீன கருவிகள் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் சிமெண்ட் பிளாக்குகள் செய்யும் பணியில் மணலுக்கு மாற்றாக முற்றிலும் அடிசாம்பலைப் பயன்படுத்த முடியும் எனவும், கான்கிரீட் பணிகளைப் பொறுத்தவரையில் 50 சதவிகிதம் மணலும், 50 சதவிகிதம் அடிசாம்பலும் பயன்படுத்தும் பட்சத்தில் சிறப்பான பலனைப் பெறமுடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை வெற்றி பெற்றதன் மூலம், ஒரு ஆண்டில், நெய்வேலி முதல் அனல் மின் நிலைய விரிவாக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் சுமார் 25 ஆயிரம் டன் அடிசாம்பலை (சுமார் 6 லட்சத்து 35 ஆயிரம் கன அடி), என்எல்சி தனது கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறது.
இதன்மூலம் என்எல்சி ஆண்டிற்கு ரூ.1.5 கோடி சேமிக்க வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அடி சாம்பலை எவ்வித வேதியியல் மாற்றங்களும் செய்யாமல் நேரடியாகவே பயன்படுத்த முடியும் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அடி சாம்பலை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிமெண்ட் பிளாக்குகளைக் கொண்டு ஒரு மாதிரிக்கட்டிடம் என்எல்சி கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி செய்யும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிக் கட்டடம், 920 சதுர அடி பரப்பில், சுமார் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் என்எல்சி தலைவர் பி.சுரேந்தரமோகன், இயக்குநர்கள் முன்னிலையில் மாதிரி கட்டடத்தை திறந்து வைத்தார். என்எல்சி ஆராய்ச்சி மையப் பொதுமேலாளர் சந்தானம், என்எல்சி கட்டுமானத்துறை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன், விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாந்தி, மோகன் கணேஷ், என்எல்சி இயக்குநர்கள் ராக்கேஷ்குமார், ராஜகோபால், ரவீந்திரநாத், பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.