முகப்பு
தமிழ்நாடு

ஒரே பகுதியில் பல ஆண்டுகள் பணியாற்றும்  காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்படுவார்களா

பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை வேறு மாவட்டத்துக்கு மாறுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

 திருக்கோவிலூர் பகுதியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை வேறு மாவட்டத்துக்கு மாறுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 திருக்கோவிலூர் காவல் சரகத்துக்கு உள்பட்டு திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், கண்டாச்சிபுரம், மணலூர்பேட்டை, திருப்பாலப்பந்தல், ரிஷிவந்தியம், பகண்டை கூட்ரோடு, வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளது.

 இவற்றில் பணிபுரியும் காவல்துறையினர் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக தொடர்ந்து இப்பகுதியிலேயே பதவியில் இருந்து வருவதால், இவர்களிடையே அலட்சியப்போக்கு, அதிகார துஷ்பிரயோகம், சமூக விரோத நடவடிக்கைகள் நாளுக்குநாள் பெருகி வருகின்றன.

 நீண்டகாலமாக ஒரே பகுதியில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று, நிரந்தர குடியிருப்பு, அசையா சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வரும் இவர்கள், இப்பகுதியில் நாளுக்குநாள் பெருகி வரும் சமூக விரோதிகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தவறி விடுகின்றனர்.

 இன்னும் ஒருபடி மேலே போய் சமூக விரோதிகளுக்கெதிரான காவல்துறை நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் கருப்பு ஆடுகளும் இவர்களில் அதிகரித்து வருகின்றனர்.

 தடை செய்யப்பட்ட லாட்டரி தடுப்பு நடவடிக்கை, கள்ளச்சாராய ஒழிப்பு, போதைப் பொருள்கள் பறிமுதல், மணல் கடத்தல் முறியடிப்பு இவற்றுக்காக மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் திட்டமிட்டு களமிறங்கும்போது, அத்தகவலை முன்கூட்டியே சம்மந்தப்பட்ட சமூக விரோதிகளுக்கு தெரிவித்து, கடைசி நிமிடத்தில்  அவர்களை தப்பிக்க செய்யும் சுயநலவாதிகளாக இவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

 இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து பத்திரிகைகள் அவ்வப்போது செய்திகள் வாயிலாக அம்பலப்படுத்தினால், அதுபற்றி மாவட்ட காவல்துறை இப்பகுதி உளவுப்பிரிவு காவலர்களிடம் விளக்கம் கேட்கும்போது, இப்பகுதியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் உளவுப்பிரிவு காவலர்களில் சிலர் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையல்ல என்று தவறான தகவல் தந்து சமூக விரோதிகளை பாதுகாத்து சுய லாபம் அடைந்து வருகின்றனர்.

 குற்றச்சாட்டு மற்றும் தண்டிப்பின் பெயரிலான இடமாற்றம், பொது இடமாற்றம் என்ற பெயரில் இவர்களுக்கு திருக்கோவிலூர் காவல் சரகத்துக்குள்ளாகவே பணி மாற்றம் வழங்கப்படுவதால் அதே அலட்சியப்போக்கு, அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல் நடவடிக்கைகள் இவர்களிடையே முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகின்றன.

 அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பெருவணிகர்கள் போன்றவர்களிடம் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டு பொதுமக்களை பாதிக்கும் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த காவல்துறை கருப்பு ஆடுகள் பெரும் உதவி புரிந்து வருகின்றனர். இதனால் கட்டப்பஞ்சாயத்து தாதாக்கள் இப்பகுதியில் பெருகி வருகின்றனர்.

 எனவே திருக்கோவிலூர் பகுதியிலேயே பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் செய்வதால் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை ஏற்படும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →