நாகை மாவட்டத்தில் ஆம்லா ஊடுருவல் தடுப்பு ஒத்திகை
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவவதைத் தடுக்கும் ஒத்திகை செயல் திட்டமான ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகை நாகை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவவதைத் தடுக்கும் ஒத்திகை செயல் திட்டமான ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகை நாகை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டில் கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் தனியார் ஹோட்டலில் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் கடல் வழியே ஊடுருவதைத் தடுக்கும் செயல் திட்டமாக ஆண்டு தோறும் ஆப்ரேஷன் ஆம்லா என்ற ஒத்திகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான முதல் செயல் திட்டமாக ஆப்ரேஷன் ஆம்லா ஒத்திகை புதன்கிழமை காலை தொடங்கப்பட்டது. இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை, கடலோரப் பாதுகாப்பு குழுமம், கடலோரக் காவல் நிலைய போலீஸார் மற்றும் மாவட்ட சட்டம்- ஒழுங்கு பிரிவு போலீஸார் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டத்தில் 4 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில், 390 போலீஸார் ஒத்திகையின் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, மாவட்டத்தில் 20 சோதனைச் சாவடிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடலோரப் பாதுகாப்புக் குழுமம் மற்றும் கடலோரக் காவல் படை போலீஸாரின் கடல் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரை திரும்பும் மீன்பிடி படகுகளும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
நாகை மாவட்டம், திருக்கடையூர், ஆக்கூர், தோப்புத்துறை, கோடியக்கரை, பரவை ஆகிய பகுதிகளை இலக்காகக் கொண்டு இந்த ஒத்திகை திட்டம் செயல்படுத்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதன்கிழமை காலை முதல் மாலை வரையிலான ஒத்திகையில், தீவிரவாதிகளைப் போல ஊடுருவ முயன்ற இந்திய கடற்படை வீரர்கள் 6 பேரும், கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் 3 பேரும் பிடிபட்டுள்ளனர்.