விருதுநகர் மாவட்டத்தில் தரம் குறைந்த விதைகளை விற்பனை செய்தால், அந்த வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது, பருவமழைக்காலம் தொடங்க இருப்பதால், விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விதை விற்பனையாளர்கள், விதை கொள்முதல் பட்டியல்களில் விதைக்குவியல் எண் குறிப்பிட வேண்டும். விதை உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே தரமான விதைகளை இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். விற்பனைக்குரிய விதைகளின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், இருப்பு அளவு மற்றும் விலை உள்ளிட்ட விவரங்களை விவசாயிகள் பார்வையில் படும் படி விளம்பர பலகை வைக்க வேண்டும்.
ஓவ்வொரு விதைக் குவியலுடன் அதன் தரம் பற்றிய பகுப்பாய்வு முடிவுகள் விவரங்களை ஆய்வு செய்யும் போது விதை ஆய்வாளர்களுக்கு கட்டாயம் காண்பிக்க வேண்டும். அதேபோல், இருப்பு வைத்துள்ள விதைக்குவியல்களை ரகம் வாரியாக, குவியல் வாரியாக அடுக்கி வைக்க வேண்டும். மேலும், உரம் பூச்சி மருந்து இல்லாத இடங்களில் வைப்பது அவசியம் ஆகும். விற்பனையாளர்கள் முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, முளைப்புத்திறன் புறத்தூய்மை, இன்த்தூய்மை குறைந்த விதைகளையோ, காலாவதியான விதைகளையோ விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியோர் மீது விதைகள் பாதுகாப்பு சட்டம் 1966-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்களின் கைபேசி எண்ணை கட்டாயம் தகவல் பலகையில் குறிப்பிட்டு விவசாயிகள் பார்வையில் படும் படி வைக்க வேண்டும். விதைகள் தொடர்பான குறைகளை தெரிவிக்க 04562-252186 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தரமான விதைகள் கிடைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என விற்பனையாளர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.