முகப்பு
தமிழ்நாடு

சமயபுரம் கோயிலில் எளிதாக தரிசனம் செய்ய புதிய திட்டம்

திருமலை திருப்பதி போன்று பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன்

Updated On : 16 செப்டம்பர், 2014 at 12:22 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:16 PM

திருமலை திருப்பதி போன்று பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகம் விரைவில் செய்ய உள்ளது.

தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்து ஆண்டு வருவாயில் (ரூ. 50 கோடி) 2-ம் இடத்தை பிடித்துள்ள இக்கோயிலுக்கு சாதாரண நாள்களில் 30,000 முதல் 50,000 பேரும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 75000 முதல் 1 லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். 

அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும் பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும்.

Advertisement

இந்த நிலையில், பக்தர்கள் வசதிக்காக மாரியம்மன் மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், வெளிப் பிரகாரகங்களை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 25.39 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தரிசனம் செய்வதற்கு குறைந்தது 30 முதல் 45 நிமிஷங்கள் வரை ஆகிறது.  விழாக் காலங்களில் 2 மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.

எனவே, திருமலை திருப்பதி கோயிலில் உள்ளது போன்று பக்தர்கள் எளிதாக அம்மனை தரிசனம் செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, இதற்கான ஆலோசனைகள், கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன என்று சமயபுரம் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ளது போன்று காத்திருப்பு அறைகள் கட்டி, பக்தர்களை அந்த அறைகளில் அமர செய்து, மாரியம்மன் சன்னதிக்கு செல்லும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 5 முதல் 10  நிமிஷங்களுக்குள் அம்மனை தரிசித்துச் செல்ல முடியும் என்கிறார் சமயபுரம் கோயில் இணை ஆணையர் ஜி. தென்னரசு.

ரூ. 50 மதிப்பில் பிரசாதம் வழங்கும் திட்டம்:  ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ரூ. 250 கட்டணச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சீட்டை பெற்றுச் சென்று அம்மனை தரிசிப்பவர்களுக்கு ரூ. 50 மதிப்பிலான பிரசாத பையும், மாலையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல, ரூ. 100 கட்டணத்தில் தரிசனம் செய்பவர்களுக்கு மாலை அணிவிக்கும் முறையையும் அமல்படுத்தியிருக்கிறோம் என்கிறார் இணை ஆணையர்.

உபகோயில்களிலும் திருப்பணிகள்: சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலாக உள்ள ச. கண்ணனூர் ஆதி மாரியம்மன் கோயில், போஜீஸ்வரர் கோயில், உஜ்ஜயினி ஓம் காளி கோயில்,  செல்லாண்டி அம்மன் கோயில், முக்தீசுவரர் கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை விரைவாக முடித்து,  மாரியம்மன் கோயில் குடமுழுக்குடன் இணைந்து இந்த கோயில்களின் குடமுழுக்கையும் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.