முகப்பு
தமிழ்நாடு

விளைநிலங்களில் உயிரிழக்கும் மயில்கள்! விஷம் வைத்து கொல்லப்படுவதாக தகவல்

கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் விளைநிலங்களில் விவசாயத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி தேசியப் பறவையான

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:20 AM
பகிர்:

கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் விளைநிலங்களில் விவசாயத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி தேசியப் பறவையான மயில்கள் கொல்லப்படுவது குறித்து சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாமிசத்துக்காவும் சட்ட விரோதக் கும்பலால் மயில்கள் வேட்டையாடுவதாகவும் கூறப்படுகிறது.
 அண்மையில் திருச்சி அருகிலுள்ள கிராமத்தில் ஒரு விவசாயி தான் விதைத்த நெல்லை மயில்கள் உண்டு விடுவதால், அந்த நெல்லில் நஞ்சு கலந்து அவற்றைக் கொன்றுள்ளார். வேறுசில இடங்களில் மயில்களைக் கொன்று அவற்றின் கறியிலிருந்து எண்ணெய் தயாரித்ததாக சிலர் கைதாகியுள்ளனர்.
 மயில் கறியைச் சுவைப்பதற்காகவும் அவற்றின் தோகைக்காகவும் கொல்லும் வேட்டையாடிகள், மயில் கறியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மருத்துவக் குணமிருப்பதாக நம்பி அவற்றைக் கொல்பவர்கள், பயிர்களைத் தின்று அழிப்பதாகக் கூறி மயில்களை நஞ்சிட்டுக் கொல்லும் விவசாயிகள் எனப் பல விதங்களில் மயில்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளன.
 விவசாயிகள் தரப்பிலோ மயில்களால் நெல் பயிர்கள் அழிக்கப்படுவதால் வேறு வழியில்லாமல் விஷம் வைக்கிறோம் என்கின்றனர்.
 தீர்வு என்ன?: மயில் நம் உயிருக்குப் பங்கம் விளைவிப்பதில்லை. மாறாக தேள், சிறிய பாம்பு, பூச்சிகள் போன்றவற்றை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
 மயிலால் விளைநிலங்களில் சேதம் ஏற்படுவதும், அவற்றுக்கு நஞ்சு வைத்துக் கொல்வதும் வட மாநிலங்களிலும் வாடிக்கையான ஒன்று. தென் மாநிலங்களில் மயில்கள் கொல்லப்படுவது குறைவாக இருந்தது. ஆனால், சமீபகாலமாக தென் மாநிலங்களில் பயிர்ச்
 சேதத்தைத் தடுக்க நஞ்சு வைத்துக் கொல்வது அதிகரித்து வருகிறது. இது முறையாகாது.
 இதனால் மயில் மட்டுமன்றி அந்த இடத்தில் உள்ள இன்னும் பல்வேறு உயிரினங்களும் கொல்லப்படுகின்றன. மயில்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் காட்டுப்பூனை, கீரிப்பிள்ளை, குள்ள நரி, நரி முதலிய இரைக்கொல்லி உயிரிகளும் அழிக்கப்படுகின்றன.
 சில வகை பூச்சிகொல்லி மருந்துகளை விளைநிலங்களில் தெளிப்பதால், மயில் போன்ற பறவைகளும் அவற்றின் இரையாகக் கொள்ளும் உயிரினங்களும் கொல்லப்படலாம். இவ்வகை பூச்சிகொல்லிகளின் உபயோகத்தை முற்றிலுமாகத் தடை செய்தல் அவசியமாகும்.
 மயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகளில் மயில்களின் கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். இதனால், எந்த இடத்தில், எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்பதை சரியான அளவில் துல்லியமாக மதிப்பிட முடியும்.
 எந்த வகையான பயிர்களை, எந்த நிலையில் (விதைகளையா, நாற்றையா), அவை எவ்வாறு சேதப்படுத்துகின்றன என்பதை அறிய வேண்டும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பிரச்னையின் தீவிரம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, அதை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.
 இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் ஜெகன்நாதன் கூறியது:
 மயில்களை விரட்ட சிறந்த உத்தி, நீளமான பளபளப்பான ஜிகினாத் தாள்களை விளைநிலங்களைச் சுற்றி கொடியில் கட்டிவிடுவதே ஆகும். இவை ஏற்படுத்தும் சலசலக்கும் ஒலி, பளபளக்கும் தன்மையால் மயில்கள் அப்பகுதிகளுக்கு வருவதை வெகுவாகத் தவிர்த்துவிடும்.
 இதைப் போன்ற முறைகளைப் பின்பற்றி மயில்கள், பயிர்களைச் சேதப்படுத்துவதைத் தவிர்க்கலாம். மயில்கள் பகலில் திரியக் கூடியவை. எனவே, மயில்கள் வரும் இடத்தையும், காலத்தையும் கண்டறிந்த பின்னர் விளைநில உரிமையாளர்கள் ஊரிலிருக்கும் ஒருவரை மயில்களை விரட்டுவதற்கென நியமிக்கலாம்.
 இந்திய வனச்சட்டம் 1972-இன் கீழ், மயில்களைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார் ஜெகன்நாதன்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments