பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினம் முதல் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினம் முதல் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சிகளாக மாற்றுவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இம் மாவட்டத்தில் உள்ள சேத்தூர், வத்திராயிருப்பு, செட்டியார்பட்டி, மம்சாபுரம், சுந்தரபாண்டியம், வ.புதுப்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, கொடிக்குளம் ஆகிய 9 பேரூராட்சிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் சுத்தமாக வைத்துக் கொள்ளும் வகையில் மறுசுழற்சிக்கு பயன்படாத பொருள்களை தவிர்ப்பது தொடர்பாக பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வணிக கடைகள், சிற்றுண்டி நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நீக்கும் வகையில் செயல்பட வேண்டும். இதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவதோடு, பிளாஸ்டிக் மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
Advertisement
எனவே வருகிற 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல், மெத்து தட்டு மற்றும் கப் போன்ற ஒரு முறை பயன்படுத்தக் கூடிய அலுமினியம் லேமிடேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக், உணவகங்களில் உணவுப் பொருள்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டி பைகள் ஆகியவை தயாரிக்கவோ, இறக்குமதி செய்யவோ, இருப்பில் வைத்து விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள், வியாபார தளம், சிறுகடைகளில் மக்காத பிளாஸ்டிக்களை பயன்படுத்தினால் அபராம் விதிக்கப்படும். அதனால், பேரூராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள அனைத்து பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்படுகிறது. இத்தடையை மீறி விற்பனை செய்வது கண்டறிந்தால் சில்லரை வியாபாரிக்கு ரூ.1000மும், சாலையோர வியாபாரிக்கு ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100ம் என அபராதமும், இருப்பு வைக்கும் மொத்த வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
அதனால், பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறுசுழற்சி முறைக்கு பயன்படுத்த வேண்டும். குப்பைகளை பொது இடங்கள், நீர் நிலைகள், கழிவு நீர் கால்வாய்கள், சாலை ஓரம் போன்ற இடங்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்த்து பொதுமக்கள் கடைக்கு செல்லும் துணிப்பைகளை பயன்படுத்தவும், அதேபோல் பிளாஸ்டிக் பைகளில் பொருள்கள் கொடுப்பதை தவிர்ப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.