விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை
விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பெரியபேராளியைச் சேர்ந்த பால்பாண்டியின் மகள் ஜெயப்பிரியா(25). இவருக்கும், பேய்க்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயப்பிரியா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதைத் தொடர்ந்து தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எல்லாரும் வெளியில் சென்றிருந்த நேரம் ஜெயப்பரியா வீட்டு உத்திரத்தில் தூக்கிட்டுக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பால்பாண்டி பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெயப்பிரியாவின் சாவு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெண் தீக்குளித்து சாவு: விருதுநகர் அருகே பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்சாமியின் மனைவி ராமுத்தாய்(55). இவர் கடந்த சில நாள்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தாராம். இதனால் மன அமைதியை இழந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.