முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் நகராட்சியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதி

விருதுநகர் நகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும்,  அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 18 ஆகஸ்ட், 2015 at 7:37 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:58 AM

விருதுநகர் நகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும்,  அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் பகுதியில் பழைய பேருந்து நிலையம், பாவாலி சாலை, பள்ளிவாசல் தெரு, ராமூர்த்தி சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக உள்ளது. அதோடு, வெறிநாய்களும் சேர்ந்து திரிவதால் பள்ளி மாணவ, மாணவிகளையும், வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரையும் துரத்திச் செல்கிறது. அதிலும், பாவாலி சாலை, நகராட்சி முஸ்லீம் பள்ளி, யானைக்குழாய் தெரு உள்ளிட்ட சாலைப் பகுதியில் இறைச்சிக் கடைகள் உள்ளன. அக்கடைகளில் வீசப்படும் கழிவு இறைச்சி துண்டுகளை எடுக்க அதிக நாய்கள் வருகின்றன. அப்போது, இருசக்கர வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்துவதிலும், திடீரென குறுக்காக செல்லும் போது நாய்கள் மீது மோதி விபத்தும் ஏற்படுகிறது.

அதிலும், பாத்திமாநகர், சிவகாசி சாலை, 4 வழிச்சாலை மீதுள்ள அரசு போக்குவரத்து அலுவலக பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் பொதுமக்களையும், வாகனங்களில் செல்வோரையும் பின்னால் துரத்திச் சென்று குரைக்கிறது. அப்போது, பேருந்து மற்றும் லாரிகளில் சிக்கி எதிர்பாரத விதமாக நாய்கள் உயிரிழந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் விபத்தில் உயிரிழந்த நாய்களை சாலையில் அகற்றாமல் இருப்பதால் துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.  எனவே நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை குறைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இது தொடர்பாக சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணசாமி கூறுகையில், நகராட்சி பகுதியில் தெருநாய்களுடன் சேர்ந்து வெறிநாய்களும் திரிகிறது. ஒரு சில நேரங்களில் நடந்து செல்கிறவர்களையும் துரத்திச் சென்று கடிப்பதால் பாதிக்கப்படுகின்றனர். இந்நாய்களை பிடிப்பதற்காக வாகனமும், அதற்கான நாய்கள் கொட்டகையும் நகராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த வாகனத்தின் கூண்டுகளை உடைத்து விட்டு குப்பைகள் அள்ள பயன்படுத்துகின்றனர். மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய தலா ஒரு நாய்க்கு ரூ.750 வரையில் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதன் மூலம் நகராட்சி அதிகாரிகள் நாய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றார்.

இது குறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், இந்நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித் திரியும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின்   எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிராணி மித்ரன் அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சையும் மற்றும் வெறிநாய்களுக்கு தடுப்பூசியும் அளிக்கப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து நாய்கள் கொட்டகையில் 2 நாள்கள் வரையில் வைத்திருந்து விட்டு, எந்த இடத்தில் பிடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் விடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.