மோடி தலைமையில் தூய்மையான ஆட்சி: அமித்ஷா பேச்சு
மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகளும் நம்மீது குற்றம் சாட்ட முடியாத வகையில் தூய்மையான ஆட்சியை நடத்துகிறோம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமீத் ஷா கூறியுள்ளார்.
மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகளும் நம்மீது குற்றம் சாட்ட முடியாத வகையில் தூய்மையான ஆட்சியை நடத்துகிறோம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமீத் ஷா கூறியுள்ளார்.
கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அவர் செவ்வாய்க்கிழமை புதுச்சேரிக்கு வந்தார். ஜெயராம் திருமண மண்டபத்தில் மாநில செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
புதுச்சேரி பொறுப்பாளர் மகேஷ் கிரி எம்.பி., தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அமீத்ஷா பேசியதாவது: கடந்த 1950-ல் சியாம்பிரசாத் முகர்ஜியால் 10 இளைஞர்களுடன் பாஜக தோற்றுவிக்கப்பட்டது. தொண்டர்கள் உழைப்பாலும், பொதுமக்கள் ஆதரவாலும், சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளோம். உலகிலேயே 11 கோடி உறுப்பினர்களுடன் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளோம்.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி தற்போது நடந்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. புதுச்சேரியில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி ஆட்சி நடக்கிறது.
நாடு முழுவதும் நாம் தொடர் வெற்றி பெற்றாலும், தேர்தல் நடக்கவுள்ள கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஓடிசா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களிலும் கட்சியை வலுப்படுத்தி, பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். இதற்கு தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அசாம் முதல் கன்னியாகுமரி வரை கட்சியைப் பலப்படுத்த வீடு வீடாக, தெரு தெருவாகச் சென்று பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்க வேண்டும்.
மோடி அரசு பதவியேற்ற 15 மாதங்களில் இந்தியாவில் விலைவாசி உயர்வு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, அண்டை நாட்டினர் நம் நாட்டு ராணுவ வீரர்கள் தலையை துண்டித்துச் செல்லும் நிலை இருந்தது. ஆனால் தற்போது மோடி ஆட்சியில் அண்டை நாட்டில் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் நிலையை உருவாக்கி உள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது. தற்போது மோடி ஆட்சியில் எதிர்க்கட்சிகளும் நம்மீது குற்றம் சாட்ட முடியாத வகையில் தூய்மையான ஆட்சியை நடத்துகிறோம் என்று பேசினார்.