நீர்த்துப் போகிறதா தூய்மை பாரதம் திட்டம்?
2019-க்குள் நாடு முழுவதும் 9.8 கோடி கழிப்பறைகளைக் கட்டும் மத்திய அரசின் "தூய்மை பாரதம் திட்டம்' தமிழகத்தில் வேகமிழந்து வருகிறது.
2019-க்குள் நாடு முழுவதும் 9.8 கோடி கழிப்பறைகளைக் கட்டும் மத்திய அரசின் "தூய்மை பாரதம் திட்டம்' தமிழகத்தில் வேகமிழந்து வருகிறது.
2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 9.8 கோடி கழிப்பறைகளைக் கட்ட மத்திய அரசு உறுதிபூண்டு அதற்கான பணிகளை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தத் தொடங்கியது. இதற்காக "தூய்மை பாரத இயக்கம்' தொடங்கப்பட்டு, கிராமப்புறங்களில் முதல் கட்டமாக கழிப்பறைகள் அமைக்க செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
2019-ஆம் ஆண்டுக்குள் 9.8 கோடி கழிப்பறைகள் அமைக்க வேண்டுமென்றால், நாள் ஒன்றுக்கு 67,000 கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும். அதாவது ஒரு நிமிஷத்துக்கு 46 கழிப்பறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால், இப்போதோ நாள் ஒன்றுக்கு 11 கழிப்பறைகளே கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 2013 - 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த இலக்கு குறைவாக உள்ளது. இதனால், பிரதமரின் தூய்மை பாரதம் திட்டப் பணி நீர்த்துப்போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலை நீடித்தால் நாட்டில் அனைவருக்குமான கழிப்பறை வசதி என்ற இலக்கை 2032-இல் மட்டுமே எட்ட முடியும்.
பள்ளிகளின் நிலை: 2014 - 2015-ஆம் ஆண்டில் நாட்டில் கழிப்பறை வசதிகள் இல்லாத அனைத்துப் பள்ளிகளிலும் தலா ஒரு கழிப்பறை கட்டப்பட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்த இலக்கும் எட்டப்படவில்லை. இந்திய பள்ளிகளில் சுமார் 4 லட்சம் கழிப்பறைகள் தேவைப்படுகின்றன. கழிப்பறை அமைக்கும் திட்டத்தில் கோகோ கோலா, பார்தி, வேதாந்தா, கெயில், எல் அண்டு டி, டாபர், யுனிடெக் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன. இதில் "டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்' 1,509 கழிப்பறைகளும், மஹிந்திரா நிறுவனம் 1,171 கழிப்பறைகளும் கட்டிக் கொடுத்துள்ளன.
50 சதவீதத்தினருக்கு கழிப்பறை இல்லை: இந்திய மக்கள் தொகையான 120 கோடியில் 50 சதவீத மக்களின் விடுகளில் கழிப்பறை இல்லை. 2.46 கோடி மில்லியன் குடும்பங்கள்- 46.9 சதவித மக்களின் வீட்டில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன. 49.8 சதவீத குடும்பங்கள் திறந்தவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்துகின்றனர் மீதமுள்ள 3.2 சதவீத மக்கள் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
தில், அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 76.6 சதவீதம் வீடுகளிலும், ஒடிஸாவில் 75.8 சதவீத வீடுகளில், பிகார், தமிழத்தில் 60 சதவீதம் வீடுகளிலும் கழிப்பறைகள் இல்லை. கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம், மூன்றில் இரண்டு வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.
இதுகுறித்து அறிவியல்-சுற்றுச்சூழல் மையத்தின் (தில்லி) இயக்குநர் சுபர்னோ பானர்ஜி கூறியதாவது:
மத்திய அரசு கழிப்பறைகள் கட்ட மானியம் வழங்குகிறது. அத்துடன் பொது சுகாதாரம், தனிமனித சுகாதாரத்தைப் பற்றிய பிரசாரங்களையும் நடத்துகிறது.
2003-ஆம் ஆண்டில், திறந்தவெளி மலம் கழித்தலை அகற்ற திட்டம் தீட்டி, திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்கும் கிராம சபைகளுக்கு விருது வழங்கவும் முடிவு செய்து அரசு அமல்படுத்தியது. கேரளத்தில் 87 சதவீத கிராம சபைகள் விருது பெற்று இருக்கின்றன. ஏழை மாநிலமான பிகாரில் உள்ள 2 சதவீத சுகாதார நிலையை, குழுக்களில் இலக்கை எட்ட முடிந்தது.
2019-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதுக்குமான கழிப்பறை என்ற கோஷம் சரியானதே. ஆனால், இந்த வேகம் போதாது. பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. மேலும், பல கிராமங்களில் கழிப்பறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
தென்னகத்தில் தமிழகம், கர்நாடக மக்கள் ஓரளவுக்கு விழிப்புணர்வுடன் உள்ளனர். ஆனால், வட மாநிலங்களில் இன்னும் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. தூய்மை பாரதம் திட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தினால்தான் இலக்கை எட்ட முடியும் என்றார் சுபர்னோ பானர்ஜி.