நிவாரணப் பொருள்கள் மீது முதல்வர் படம்: விஷமப் பிரசாம் என அதிமுக விளக்கம்
தனியாரால் விநியோகிக்கப்படும் நிவாரணப் பொருள்களில் முதல்வர் படம் ஒட்டுவதற்கு கட்டாயப்படுத்துவதாக கூறுவதில் உண்மையில்லை என அதிமுக விளக்கம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு, தனியாரால் விநியோகிக்கப்படும் நிவாரணப் பொருள்களில் முதல்வர் படம் ஒட்டுவதற்கு கட்டாயப்படுத்துவதாக கூறுவதில் உண்மையில்லை என அதிமுக விளக்கம் அளித்துள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சில இடங்களில் பொருள்கள் விநியோகிக்கப்படும் முன்னர், அதில் முதல்வர் படத்தை ஒட்டுவதற்கு அதிமுகவினர் கட்டாயப்படுத்தப்படுவதற்காக புகார்கள் எழுந்தது.
Advertisement
இதுகுறித்த கருத்துகள், எதிர் கருத்துகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதனால் நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர், முற்றிலும் தவறான தகவல் இது என்றார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இதேபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதற்கு நேரமே இல்லை.
மேலும், திருவள்ளூர்- திருத்தணி சாலையில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை அதிமுகவினர் மறித்ததாக வந்த செய்தியிலும் எவ்வித உண்மையும் இல்லை. நேர்மையற்றவர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக செய்யும் விஷமப் பிரசாரமே இது என்றும் அவர் குறிப்பிட்டார்.