தமிழ்நாடு

தாமிரவருணி கரையோரக் குடியிருப்புகள்!கட்டுமானத் தொழில்நுட்பத்துக்கு சான்று

திருநெல்வேலி மாநகரில் தாமிரவருணி கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் வகையில் உயரமாகக் கட்டப்பட்டு அக்கால கட்டுமானத் தொழில்நுட்பத்துக்குச் சான்றாகக் காட்சியளிக்கின்றன.

ஆர். முருகன்

திருநெல்வேலி மாநகரில் தாமிரவருணி கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் வகையில் உயரமாகக் கட்டப்பட்டு அக்கால கட்டுமானத் தொழில்நுட்பத்துக்குச் சான்றாகக் காட்சியளிக்கின்றன.

நதிக்கரையில்தான் நாகரிகம் தோன்றியது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் கட்டடக் கலையும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளன. தாமிரவருணி நதிக் கரையில் விவசாயம், மண்பாண்டத் தொழில்கள் அதிகம் தோன்றியிருந்தாலும், அதைச் சார்ந்து வாழ்ந்த மக்களும் அவரவர் வசிப்பிடத்துக்கு தகுந்தபடி குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.

குறிப்பாக, மாநகரப் பகுதியில் தாமிரவருணி நதிக் கரைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை கட்டும் போது நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டடத்தை வடிவமைத்துள்ளனர். கொக்கிரகுளம், சிந்துபூந்துறை பகுதிகளில் உள்ள வீடுகள் இதற்குச் சான்றாக இன்றும் காட்சியளிக்கின்றன.

தாமிரவருணி நதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதாலும், தொடர் மழையாலும் தாமிரவருணியில் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது. சிந்துபூந்துறை, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், திருநெல்வேலி சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருந்த வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன.

தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் மூழ்கினாலும், உயரமாகக் கட்டப்பட்டிருந்த வீடுகளில் வெள்ளப் பாதிப்பு இல்லை. சேதாரமும் இல்லை.

இங்குள்ள வீடுகள் அனைத்துமே 2 அல்லது 3 ஆள் மட்டம் உயரத்தில் தரைத்தளம் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்குள் நுழைய குறைந்தது 10 முதல் 15 படிக்கட்டுகளை ஏறிச் செல்ல வேண்டும். இப்போது, சாலையின் உயரம் கூடியதால் இந்த அளவு குறைந்திருக்கலாம். ஆனால், வெள்ளம் வந்தால் தண்ணீர் வீட்டுக்குள் புகாது. நூற்றாண்டுகளைக் கடந்த பல வீடுகளும் இதற்குச் சான்றாக உள்ளன. சீட்டு கட்டுகளை அடுக்கி வைத்ததைப் போன்று, அடுத்தடுத்த வீடுகள் ஒருசேர உயரமாகக் கட்டப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கொக்கிரகுளத்தில் 1942 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர் மாரிமுத்து கூறியதாவது:

எனது தாத்தா காலத்தில் கட்டப்பட்டது இந்த வீடு. அப்போது, கரைக்கு மிக அருகில் இருந்ததால் தண்ணீர் உள்ளே புகக் கூடாது என்பதற்காக, அதிக படிக்கட்டுகளை அமைத்து வீடுகளையும் உயர்த்திக் கட்டியுள்ளனர். 1992 ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்தபோது இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை பெருமளவு பாதிக்கவில்லை. படிக்கட்டுகளை தொட்டபடிதான் தண்ணீர் சென்றது. வரும் ஆபத்தை முன்னரே உணர்ந்து, மூதாதையர்கள் இந்த வகையில் வீடுகளைக் கட்டியுள்ளனர் என்றார் அவர்.

சிந்துபூந்துறை கீழத் தெருவைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி கூறியதாவது:

மூன்று தலைமுறைகளாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறோம். இங்குள்ள வீடுகள் அனைத்துமே 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை. அப்போது தாமிரவருணி கரையோர மணல் பகுதியாக இருந்ததுதான் இப்போது சாலையாக மாறியுள்ளது. ஆற்றில் தண்ணீரின் ஓட்டம் அதிகரித்தால் வீட்டுக்குள் வந்துவிடும் என்பதை உணர்ந்துதான் வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தி கட்டியுள்ளனர். குறிப்பாக, கரையோரப் பகுதிகளில் மட்டும்தான் இத்தகைய வீடுகள் உள்ளன என்றார்.

1810-இல் தொடங்கி 1992-இல் முடிந்த கதை!

தாமிரவருணியில் பெருவெள்ளம் என்பது 1810 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் செ. திவான். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தாமிரவருணியில் 1810-இல் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதன் பிறகு, 1827, 1847, 1867, 1874, 1877, 1880, 1885, 1914 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து பெருவெள்ளத்தை சந்தித்தது. குறிப்பாக, 1914-இல் ஏற்பட்ட வெள்ளம்தான் கொக்கிரகுளம் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை மூழ்கடித்துச் சென்றது. அதன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் கொக்கிரகுளத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தெருவில் வரிசையாக கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் செங்குத்தான படிக்கட்டுகளுடன் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன.

கட்டபொம்மன் காலத்து கட்டடக் கலைக்கு பயன்படுத்திய கருப்பட்டி, சுண்ணாம்பு, பதநீர், முட்டைக் கரு, செங்கல் கொண்டு கட்டப்பட்டவை. இதனால்தான், 1992-இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போதும் இந்தப் பகுதி வீடுகள் சேதமடையாமல் இருந்தன. நதிக்கரை மட்டுமல்லாது, திருநெல்வேலி நகரத்தில் வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள வீடுகளும் கருங்கற்கள் அடுக்கிவைப்பட்டு மிக உயரமாகக் கட்டப்பட்டிருப்பதைக் காண முடியும் என்றார் அவர்.

சிந்துபூந்துறை கீழத்தெரு பகுதியில் செங்குத்தான

படிக்கட்டுகளுடன் உயரமாக கட்டப்பட்டுள்ள வீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT