அரவிந்தர் ஆசிரம சகோதரிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்
தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம சகோதரிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தலைமை தபால் நிலையம் அருகே திங்கள்கிழமை தொடங்கினார்.
தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம சகோதரிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தலைமை தபால் நிலையம் அருகே திங்கள்கிழமை தொடங்கினார்.
அரவிந்தர் ஆசிரமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத்- சாந்திதேவி தம்பதி, மகள்கள் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகியோரும் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தனர். இவர்கள் ஆசிரமத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தனர்.
ஆசிரம நிர்வாகத்தினர் மீது சகோதரிகள் பாலியல் புகார் கூறினர். இதனால் ஆசிரம நிர்வாகம் அவர்களை விடுதியை காலிசெய்துவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. ஆனால் சகோதரிகள் விடுதியை காலிசெய்ய மறுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆசிரமத்தைவிட்டு சகோதரிகள் வெளியேற 6 மாத காலம் கெடு விதிக்கப்பட்டது. இந்த காலக்கெடு முடிந்த பிறகும் சகோதரிகள் விடுதியில் இருந்தனர். இதனால் போலீசார் உதவியுடன் ஆசிரம நிர்வாகம் சகோதரிகளை விடுதியிலிருந்து வெளியேற்றியது.
இதனால் மனமுடைந்த சகோதரிகள், பெற்றோருடன் கடந்த 2014 டிசம்பரில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாயார் சாந்திதேவி, ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர். பிரசாத், சகோதரிகள் நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகிய 4 பேர் மீட்கப்பட்டனர். இந்த தற்கொலை சம்பவத்தின்போது அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் பலாத்காரமும் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் ஜெயஸ்ரீ காப்பகத்தில் தங்கியுள்ளார். பிரசாத், மக்கள் ஹேமலதா, நிவேதிதா ஆகியோர் புதுச்சேரி கேன்டின் வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம், புதுவை போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர்.
போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை தருவதாக புதுவை அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை அரசு சார்பில் எந்த உதவியும் அளிக்கப்படவில்லை.
இதை கண்டித்தும், ஆசிரம நிர்வாகத்தின் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரியும் சகோதரிகள் திங்கள்கிழமை திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைமை தபால்நிலையம் முன்பு ஆசிரம சகோதரிகள் நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு சமூக அமைப்புகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திராவிடர் கழகம் சிவவீரமணி, எஸ்ஆர்.காங்கிரஸ் ராமமூர்த்தி, தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், நுகர்வோர் பாதுகாப்புக்கழக தலைவர் முருகானந்தம், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், தமிழ் தமிழர் இயக்கம் பிரதாப், திராவிடர் விடுதலைக்கழகம் கோகுல்காந்திநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆசிரம சகோதரிகள் எந்த அனுமதியும் போலீசாரிடம் பெறவில்லை. இருப்பினும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தையொட்டி தலைமை தபால்நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.