முகப்பு
தமிழ்நாடு

இலங்கை-இந்திய மீனவர் பிரச்னைக்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்

4-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை-இந்திய மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என இலங்கை மீனவர் பேரவை நிர்வாகி ஹெர்மன் குமாரா தெரிவிததுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

4-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை-இந்திய மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்கும் என இலங்கை மீனவர் பேரவை நிர்வாகி ஹெர்மன் குமாரா தெரிவிததுள்ளார்.

புதுச்சேரியில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை-இந்திய மீனவர்கள் இடையே ஏற்கெனவே 3 சுற்றுக்கள் பேச்சுவார்த்தை முடிந்துள்ளன. இன்னும் இருதரப்பு மீனவர்களிடையே நம்பகத்தன்மையை தீவிரமாக உருவாக்க வேண்டும்.

இரு நாட்டு மீனவர் பிரச்னையில் கடற்படைகள் தலையிடுவதை இலங்கை மீனவர்கள் ஏற்கவில்லை. இந்திய அரசு இப்பிரச்னையில் மேலும் தீவிரம் காட்டவேண்டும்.

இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விசைப்படகு மீனவர்கள், இலங்கை கடல்பகுதியில் 83 நாள்கள் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு அம்சங்கள் தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது. இவற்றை தீர்ப்பதற்கான செயல்முறையை உருவாக்க வேண்டும்.

20 ஆண்டுகள் நடந்த போரால் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது தான் அவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர். இலங்கை மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி தான் மீன்பிடிக்கின்றனர். இரு நாட்டு மீனவர்கர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது.

எனவே விரைவில் நடக்கவுள்ள நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு கிடைக்கும் என்றார் ஹெர்மன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.