சென்னையின் நலவாழ்வுக்கு 13 லட்சம் மரங்கள் தேவை!
சென்னைவாசிகளின் ஆரோக்கியமான வாழ்வுக்கு 13 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் அமைப்புகளின் கணக்கீடு.
சென்னைவாசிகளின் ஆரோக்கியமான வாழ்வுக்கு 13 லட்சம் மரங்கள் இருக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் அமைப்புகளின் கணக்கீடு.
ஆனால், பல்வேறு காரணங்களால் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதால், சென்னையில் இப்போது 3.75 லட்சம் மரங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாகவே, சுவாசக் கோளாறுகள், சுட்டெரிக்கும் வெயில் தாக்கம், கண் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு பெரும்பாலான சென்னை மக்கள் ஆளாகி வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் அனைத்து முக்கிய மாநகரங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மரங்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வை "ட்ரீ பேங்க்' தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து அண்மையில் மேற்கொண்டன. இந்த ஆய்வுக்கு மும்பை மாநகராட்சி தொழில்நுட்ப உதவியை வழங்கியது.
மக்கள் நெருக்கத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு மாநகரிலும் எத்தனை மரங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கணக்கிடவும், குறைவாக உள்ள மாநகரங்களில் மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது சென்னை மாநகரில் 65 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இத்தனை மக்கள் ஆரோக்கியமாக வாழ சுத்தமான காற்று கிடைக்க, 13 லட்சம் மரங்கள் இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 3.75 லட்சம் மரங்கள் மட்டுமே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்ததற்கான காரணம் என்ன? பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 10 லட்சம் மரங்கள் இருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இப்போது எங்கு திரும்பினாலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வானளாவிய வணிக வளாகங்கள் என கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை சென்னை மாநகரம் எட்டியிருக்கிறது. இந்த பெரு வளர்ச்சிக்காக பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதோடு, சாலை அகலப் பணி, மேம்பாலப் பணி, மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மேலும் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன.
இதில் மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான பகுதிகளில் மட்டும் 400 மரங்கள் வெட்டப்பட்டதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக வெட்டப்பட்டதன் காரணமாக, இப்போது 3.75 லட்சம் மரங்கள் மட்டுமே மாநகரில் எஞ்சியிருக்கின்றன.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரங்கசாமி கூறியது:
ஒரு மரம் நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு அவர்களின் வாழ்நாளுக்கு தேவையான பிராண வாயுவை வழங்குகிறது. அதாவது, ஒரு மரம் 118 கிலோ அளவிலான பிராண வாயுவை நாள்தோறும் வெளியிடுகிறது.
சென்னையைப் பொருத்தவரை இப்போது 20 வகையான மரங்கள் உள்ளன. பல்வேறு நகரமயமாக்கல் பணிகளுக்காக வெட்டப்பட்டதன் மூலம் 19, 865 கிலோ ஆக்ஸிஜனை நாம் இழக்க வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், 104 பேர் தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான ஆக்ஸிஜனை இழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இந்த அபாயத்தை உணர்ந்து வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றார் அவர்.
சென்னையில் இருக்கும் மரங்களின் வகைகள்
1. தென்னை
2. புளிய மரம்
3. மா
4. வேலி காத்தான்
5. சீமை வேலிகாத்தான்
6. செம்மயிற்கொன்றை (குல்மொஹர்)
7. மழை மரம்
8. வேம்பு
9. சாம்பல்
10. செப்புநெற்று
11. இந்தியக் கடற்கரை மரம்
12. கருவேலம்
13. மஸ்து மரம்
14. வளைகுடா மரம்
15. எலுமிச்சை
16. கொய்யா
17. அரசு
18. ஆல்