முகப்பு
தமிழ்நாடு

தவளைகளின் அழிவால் பெருகி வரும் கொசுக்கள்

இயற்கையில் எதுவுமே வீணாகப் படைக்கப்படுவது இல்லை. சிறிய எறும்பு முதல் பெரிய யானை வரை எல்லா உயிரினங்களுக்குமே

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

இயற்கையில் எதுவுமே வீணாகப் படைக்கப்படுவது இல்லை. சிறிய எறும்பு முதல் பெரிய யானை வரை எல்லா உயிரினங்களுக்குமே இயற்கைச் சூழலமைப்பில் ஒரு முக்கியப் பங்குண்டு.
 அதுபோலத்தான் தவளைகளும். தவளை ஓர் ஆதார உயிரினம் (ஓங்ஹ்ள்ற்ர்ய்ங் நல்ங்ஸ்ரீண்ங்ள்). ஒரு இயற்கைச் சூழலமைப்பில் ஒரு உயிரினத்தை மட்டும் அங்கிருந்து முற்றிலும் அழித்துவிட்டால் அந்தச் சூழலமைப்பே முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும்.
 அப்படிப்பட்ட உயிரினங்களைத்தான் நாம் ஆதார உயிரினம் என்கிறோம். நமது காட்டின் ஆதார உயிரினம் யானைகள். அதைப்போலவே நமது நீர்நிலைகளின் ஆதார உயிரினம் தவளைகள். தவளைகளின் முக்கிய உணவு பூச்சிகள். அதிலும் மிக முக்கிய உணவு கொசுக்கள்.
 சென்னை மாநகரில் ஒரு காலத்தில் ஏராளமான தவளைகள் இருந்தன, அதனால் கொசுவின் தொல்லையும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது கொசுக்களின் காரணமாக ஏராளமான நோய்கள் பெருகிவிட்டன.
 இதில் டெங்கு, காலரா போன்ற கொசுவால் பரவும் நோய்களால் ஆயிரக்கணக்கில் பணம் விரையமாவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுவிடுகிறது. அரசும் தம் பங்குக்கு கோடிக்கணக்கில் செலவுசெய்து கொசுக்களை ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
 ஆதார உணவு: தவளையின் ஆதார உணவு கொசுக்கள். பல கோடி செலவிடப்பட்டு கொசுக்களை ஒழிக்க முடியாததை, தவளைகள் செய்துவிடும். மேலும் தவளைகளின் முட்டைகளிலிருந்து வெளிவரும் தலைப்பிரட்டைகள் நீர்நிலைகளிலுள்ள கொசுமுட்டைகளையும், கொசுமுட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களையும் ஆரம்பத்திலேயே உண்டு கொசுவின் பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இப்போது கிராமங்களில் மட்டுமே தவளைகளைக் காண முடிகிறது, நகரப் பகுதிகளிலிருந்து முற்றிலும் தவளைகளை ஒழித்தாகிவிட்டது.
 இது குறித்து வன ஆர்வலர் ஜெகன்நாதன் கூறியது: சிலருக்கு தவளைகளைக் கண்டால் அருவெறுப்பும், பயமும் ஏற்படும். ஆனால், அவை பல பூச்சிகளையும், கொசுக்களையும் சாப்பிட்டு நமக்கு நன்மை செய்பவை. தவளைகள் அழகானவை, குறிப்பாக இந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் மழைக்காடுகளில் தென்படும் புதர் தவளைகள். பார்த்தவுடன் நம்மை ஈர்க்கக்கூடிய பச்சை, இளம்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு, செங்கல் நிறம், ஆரஞ்சு நிறம், மிட்டாய் நிறம் என பல வண்ணங்களிலும், அழகிய புள்ளிகளைக்கொண்ட வரிகளுடைய வடிவங்களில் உள்ள தவளைகள் பல இங்கு தென்படுகின்றன. இவை சுமார் 3 செ.மீ நீளமே இருக்கும். சில தவளைக் குஞ்சுகள் நம் விரல் நகத்தின் அளவை விட சிறியவை. இந்த தவளைகள் பெரும்பாலும், மர இலைகளின் மேலோ, கீழோ, கிளைகளிலோ அமர்ந்திருக்கும். மழைக்காட்டின் விதானம், மத்தியப் பகுதி, தரைப்பகுதி என பல அடுக்குகளில் இவை வாழ்கின்றன என்றார் ஜெகன்நாதன்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments