தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்

தினமணி

பூலோக கயிலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை தம்பதி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு காலை 8 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமான் வீற்றுள்ள சித்சபை, ராஜ்யசபை என்கிற ஆயிரங்கால் மண்டபம், நான்கு ராஜகோபுரங்கள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சித்சபா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.

தலைமை ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில் ஆச்சாரியார்கள் சித்சபை, ராஜ்யசபை, நான்கு கோபுரங்களுக்கும் காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் கலசத்தில் கும்பநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 8.25 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவில் தெருவடைச்சான் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்த் திருவிழா: இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர் ஆகிய ஐவரும் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதிவலம் வருகின்றனர். பின்னர் ஆயிரங்கல் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

மகாபிஷேகம்: இதேபோல, ஞாயிற்றுக்கிழமை (மே.3) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், தங்க பொற்காசுகளால் ஸ்வர்ணாபிஷேகமும் நடைபெறுகின்றன. பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம், சித்சபா பிரவேசம் நடைபெறுகின்றன. 4-ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.

முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு: கும்பாபிஷேக விழாவில் காஞ்சி மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி விஜயேந்தர சரஸ்வதி சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான், தருமை ஆதீனம், இலங்கை இந்து சமய, புனர்வாழ்வுத் துறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலா, அக்னிஹோத்ரி, வைத்தியநாதன், மகாதேவன், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT