முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: தனியார்களால் வளர்க்கப்படும் யானைகளின் எதிர்காலம் என்ன?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கோயில் திருவிழா உள்ளிட்ட

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பப்படும் தனியார் யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
 கேரளத்தில் 700 யானைகளும், தமிழகத்தில் 90 யானைகளும் வளர்க்கப்பட்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த யானைகள்தான் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
 தனியார்களால் வளர்க்கப்படும் யானைகள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதாகவும், இதைத் தவிர்க்க சட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்று கோரியும் பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 இதை விசாரித்த நீதிமன்றம் திருவிழாக்களில், யானைகளை வதைக்கும் நபர்களை ஜாமீனில் வெளிவர முடியாதவாறு கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 எனவே, இனி தனியார்களால் வளர்க்கப்படும் யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த உத்தரவையடுத்து காலங்காலமாக கேரளத்திலும் தமிழகத்திலும் பாரம்பரியமாக வளர்க்கப்படும் யானைகளும், அதனை திருவிழாக்களுக்கு வாடகைக்கு விடும் நபர்களும் பெரும் கலக்கமடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் யானைகள் வதைக்கப்படாமல் இருந்தாலும் யாராவது பொய் புகார் கொடுத்தால் கூட கைது செய்யப்படலாம் என யானை பாகன்கள் தெரிவிக்கின்றனர்.
 மேலும், யானைகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வரும் வருமானமே தங்களது வாழ்வாதாரம் என்றும் அந்த வருமானத்தைக் கொண்டுதான் யானைகளை பராமரிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
 எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் அந்த வருமானத்தை நம்பியிருப்போரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
 கலாசாரத்தின் அடையாளம்: கேரள மாநிலத்தில் யானைகள் கலாசாராத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றன. திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் அணிவகுப்பு நடத்துவது பிரபலம் ஆகும். யானைகளுக்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
 அதேபோல குருவாயூர் கோவில்களில் யானைகள் தெய்வங்களாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற திருவிழாக்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து விலங்கியல் ஆர்வலர்களால் புகார் அளிக்கப்பட்டு வந்தது.
 அதில் முக்கியமாக திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பியிருந்தனர்.
 மேலும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கோவில் திருவிழாக்கள், ஊர்வலங்களில் யானைகளை பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 106 யானைகள் இறப்பு: கேரளத்தில் பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு மட்டும் 106 யானைகள் இறந்துள்ளன.
 வனவிலங்குகள் நல அமைப்பான, டாஸ்க் போர்ஸ் என்ற அமைப்பு, சமீபகாலமாக கேரளத்தில் யானைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
 அங்கு கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 12 ஆண் யானைகள், 60 பெண் யானைகள் உட்பட, 106 யானைகள் இறந்துள்ளன என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவுதான். தமிழகத்தில் கோவில்களிலும், சில மடங்களிலும் மட்டுமே யானைகள் வளர்க்கப்படுகின்றன. சில,கோயில்களில் மட்டுமே யானைகள் திருவிழாவின்போது பிரதானப்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில கடந்த ஆண்டு வயது மூப்பு காரணமாக இரண்டு யானைகள் மட்டுமே கோயில்களில் இறந்துள்ளன.
 இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியாளர் அனந்தகுமார் கூறியது: சுமார் 5 லட்சம் மக்கள் கூடும் திருவிழாவில் வாத்தியங்கள் இசை முழங்க யானைகளை நிற்க வைப்பது இயற்கைக்கு எதிரான செயல்.
 மேலும், திருவிழாவுக்கு முன்பு யானைகளுக்கு கனமான ஆபரணங்கள் மாட்டுவது, பட்டாசு ஆகியவை யானைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களாகும். யானைகளுக்கு தேவையான ஓய்வும் திருவிழா சமயங்களில் அளிக்கப்படுவதில்லை. மேலும் யானைகளுக்கு மதம்பிடிக்கும் காலங்களில் அவற்றுக்கு மருந்து கொடுத்து மஸ்து வராமல் தடுப்பது ஆகியவை இயற்கைக்கு மாறான செயல். ஒரு விலங்கை இப்படியெல்லாம் துன்புறுத்தும் கலாசாரம் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது என்பதனை ஆராய வேண்டும்.
 எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்புக்குரியது என்றார் அனந்தகுமார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments