முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் திட்டப் பணி: பனகல் பூங்காவைக் கையகப்படுத்த திட்டம்!

மெட்ரோ ரயிலின் அடுத்தக்கட்டப் பணிகளுக்காக, தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்காவை விரைவில் கையகப்படுத்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

மெட்ரோ ரயிலின் அடுத்தக்கட்டப் பணிகளுக்காக, தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்காவை விரைவில் கையகப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, ரூ.46 ஆயிரம் கோடியில் 88 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
 கோயம்பேடு- ஈஞ்சம்பாக்கம்:
 கோயம்பேடு முதல் நெற்குன்றம் வரையான ரயில் பாதை திட்டத்தில் கோயம்பேடு, சாலிகிராமம், வட பழனி, கோடம்பாக்கம், பனகல் பூங்கா, நந்தனம், லஸ், மந்தைவெளி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் வரை 27 கி.மீ. தொலைவுக்கு ஒரு வழித்தடத்தில் முதல் கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இது 14 கி.மீ. தொலைவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 இதற்காக தியாகராய நகரில் உள்ள புகழ்பெற்ற பனகல் பூங்கா கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், பூங்காவை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
 மாதவரம்-திருவான்மியூர்: இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் வழித்தடமாக மாதவரம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜெமினி, ராதாகிருஷ்ணன் சாலை, லஸ், கலங்கரை விளக்கம் வரை 17 கி.மீ. தொலைவுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்போது விரிவுபடுத்தப்பட்டு சிறுசேரி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது. மேலும், இது திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். இதன்படி, 41 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
 பழைய மகாபலிபுரம் சாலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால், அங்கு வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்றாற்போல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் மேம்படுத்த முடியும்.
 மாதவரம் - பெரும்பாக்கம்: மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மேற்கு, முகப்பேர், மதுரவாயல், வளசரவாக்கம், வர்த்தக மையம், ராணுவப் பயிற்சி அகாதெமி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் வரை 33 கி.மீ. தொலைவுக்கு மூன்றாவது வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆலந்தூர், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும்.
 மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிக்கான மூன்று வழித்தடங்களிலும் ஆய்வுப் பணிகள் முடிவடைந்துவிட்டன என்று ரயில் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பூங்காக்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்: பூங்காக்கள் கையகப்படுத்தப்படுவது குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
 பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும், பூங்காகள் கையகப்படுத்தப்பட்டும், பணிகள் நடைபெறுகின்றன.
 வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக் கன்றுகள் நடப்பட்ட பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், பணிகள் முடிந்த பின்பு, பயன்படுத்தப்பட்ட பூங்காக்கள் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குவிடப்படும் என்றனர்.
கையகப்படுத்தப்படும் 3-வது பூங்கா
 சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதல்வரான பனகல் அரசர், தியாகராஜ நகரில் 1923-இல் பூங்காவை உருவாக்கினார். அவரது பெயரே பூங்காவுக்கு வைக்கப்பட்டது. 8 ஏக்கரில் உள்ள பூங்காவுக்கு 3 வழிகள் உள்ளன.
 2008-இல் பூங்காவில் மாநகராட்சி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அப்போது மூடப்பட்ட பூங்கா, 2010-இல் பணிகள் முடிந்து மீண்டும் திறக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் இந்தப் பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோல், ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு பூங்கா, செனாய் நகரின் திரு.வி.க. பூங்கா ஆகிய 2 பூங்காக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments