நெல்லை: 100 அடியை நெருங்குகிறது பாபநாசம் அணை
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பியதை அடுத்து அணைகளிலிருந்து வெள்ளிக்கிழமை உபரிநீர் 1,000 கனஅடி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கனமழை, அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அந்தமான் அருகே கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. வெள்ளிக்கிழமையும் மழை நீடித்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெற்றது. அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பியதை அடுத்து இவ்விரு அணைகளிலிருந்து 1,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கருணை ஆறு, ராமநதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் கீழ் அணையில் அதிகபட்சம் 136 மி.மீ மழை பெய்ததாலும், கடனாநதி, ராமநதி அணைகளின் உபரிநீர் திருப்புடைமருதூரில் தாமிரவருணி ஆற்றில் கலப்பதாலும் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,000 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு 1150 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 947 கனஅடியும் இருந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.65 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.70 அடியாகவும்இருந்தது.