நீர்பிடிப்பு பகுதி தொடரும் மழை: நெல்லை மாவட்டத்தில் 4 அணைகள் நிரம்பின
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 38, பாபநாசம் கீழ் அணை 54, சேர்வலாறு அணை 28, மணிமுத்தாறு அணை 27.8, கடனாநதி அணை 28, ராமநதி அணை 25, கருப்பாநதி அணை 8, குண்டாறு அணை 16, அடவிநயினார் அணை 122.25 அடி, நம்பியாறு அணை 13, கொடுமுடியாறு அணை 12, திருநெல்வேலி 36, பாளையங்கோட்டை 43, அம்பாசமுத்திரம் 32, சேரன்மகாதேவி 40, கன்னடியன் அணைக்கட்டு 35, களக்காடு 23.4, மூலக்கரைப்பட்டி 25.2, தென்காசி 26.4, செங்கோட்டை 15.1, ஆய்க்குடி 40.6, ராதாபுரம் 15, நான்குனேரி 47.4, ஆலங்குளம் 55.4.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1546.51 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 100.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 117.72 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1021 கனஅடி நீர்வரத்து இருந்தது.
அணையின் நீர்மட்டம் 76.10 அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டுள்ளன.கடனாநதி அணைக்கு வந்து கொண்டிருந்த 271.56 கனஅடியும், ராமநதி அணைக்கு வந்து கொண்டிருந்த 243.13 கனஅடியும், கருப்பாநதி அணையில் 40 கனஅடியும் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடியும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82.25 அடியும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் இருந்தது. குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 122.25 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 33 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 41 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 18.90 அடியாகவும் இருந்தது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடித்து வரும் தாமிரவருணி பாசனத்தில் உள்ள மானாவாரிக் குளங்கள் நிரம்பி வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, குண்டாறு ஆகிய அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமையும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. குடிநீர் திட்டம் சேதம்: கருணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் உள்ள குடிநீர் திட்டங்கள் சேதமடைந்து அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், காக்கநல்லூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.