முகப்பு
தமிழ்நாடு

தெரு விளக்குகளை இணையம் மூலம் கண்காணிக்கத் திட்டம்: சேலம் மாநகராட்சியில் விரைவில் அறிமுகம்

தெரு விளக்குகள் எரிவதை இணையம் மூலம் கண்காணிக்கும் வசதி சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

தெரு விளக்குகள் எரிவதை இணையம் மூலம் கண்காணிக்கும் வசதி சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் எரியாத தெரு விளக்குகள் கண்டறியப்பட்டு, உடனடியாகச் சரிசெய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவை மழை, வெயில், அவற்றின் எரிசக்தித் திறன் முடிவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநகராட்சிப் பகுதிகளின் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை.

எரியாத தெரு விளக்குகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி, அவற்றைச் சரிசெய்தாலும், இந்தப் பிரச்னையை முழுமையாகவும், உடனடியாகவும் தீர்க்க இயலவில்லை.

இதனால் வாரந்தோறும் மாநகராட்சியில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், தெரு விளக்கு பிரச்னை குறித்து அதிகமான மனுக்கள் வருகின்றன. மேலும், மாநகராட்சியில் இயங்கும் தெரு விளக்குகள் காரணமாக, அதிகமான மின்சாரம் செலவாகி, அதிகப்படியான மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

அடிக்கடி எரியாத தெரு விளக்குகள் பிரச்னையைச் சமாளிக்கும் விதத்திலும், அவற்றால் மாநகராட்சிக்கு ஏற்படும் அதிகப்படியான மின் கட்டணத்தைக் குறைக்கும் விதமாகவும் மாநகராட்சி சார்பில் மின் சேமிப்புத் திட்டத்தின் கீழ் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறைந்த அளவில் மின்சக்தி தேவைப்படும் எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தி, அவற்றை இணையம் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை சேலம் மாநகராட்சி விரைவில் செயல்படுத்த உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் எரியும் தெரு விளக்குகளின் காரணமாக அதிகமான மின்சாரம் செலவாகிறது. இதனால் மாநகராட்சி அதிகப்படியான மின் கட்டணத் தொகை செலுத்த வேண்டியுள்ளது.

இதைக் குறைப்பதற்காகவும், மாநகராட்சிப் பகுதிகளில் அடிக்கடி எரியாத தெரு விளக்கு பிரச்னையை சமாளிக்கும் விதமாகவும் ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தனியார் நிறுவனம் மூலம் மின் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 40 வாட்ஸ் மின்திறனுள்ள 19,193 குழல் விளக்குகளை 20 வாட்ஸ் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை மண்டலங்களில் 8,475 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றுக்கும் புதிதாக 2,291 குழல் விளக்குகள் விரைவில் பொருத்தப்பட உள்ளன.

இந்த விளக்குகளின் பராமரிப்புப் பணிகளை 10 ஆண்டுகள் வரை குறிப்பிட்ட தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் மின்சாரச் செலவை 40 சதவீதம் குறைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், தெரு விளக்குகளை இணையம் மூலம் கண்காணிக்கும் வசதியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, 25 விளக்குகளுக்கு ஒரு பில்லர் பாக்ஸ் வைக்கப்பட்டு, அதில் சிம் கார்டுகள் பொருத்தப்பட உள்ளன.

இவை ஜி.பி.எஸ்., வைஃபை மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ள கணினி மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

கணினியில் விளக்குகள் எரிகின்றனவா, இல்லையா என்பதை இருக்கும் இடத்திலிருந்தே அறிந்து கொண்டு, எரியாத விளக்குகளை உடனடியாகச் சீரமைக்க முடியும். இந்தத் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →