சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு
மழை நிவாரணம் கோரி மருங்கூர், தொப்புக்கொல்லை, மானடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மழை நிவாரணம் கோரி மருங்கூர், தொப்புக்கொல்லை, மானடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லுக்காரன்குட்டையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8, 9 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. நெய்வேலியில் ஒரே நாளில் வரலாறு காணாத அளவு 45 செ.மீ மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பண்ருட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. மிக மோசமாக விசுர், பெரியகாட்டுபாளையர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 5 அமைச்சர்கள் கடலூர் மாவட்டத்தில் தங்கி மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட ஒரு சில கிராமங்களுக்கு தலா 5 ஆயிரம் 4,100 2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இதனால் இதர பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே கடந்த 4 நாட்களாகச் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கும் நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இன்று காலை மருங்கூர், தொப்புக்கொல்லை ஆகிய கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் கொல்லுக்காரன் குட்டையில் அமர்ந்து சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியலால் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல் மற்ற சில கிராமத்தினரும் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.