விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில்: கார்த்திகை மகாதீபம் பக்தர்கள் பரவசம்
விராலிமலை சுப்பிரமணியர் சாமி திருக்கோயிலில் கார்த்திகை மகாதீபம் பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் புதன்கிழமை நடைபெற்றது.
விராலிமலை சுப்பிரமணியர் சாமி திருக்கோயிலில் கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை மகாதீபம் பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்பிரணியர் சாமி கோயில், புதுக்கோட்டை மாவட்ட தேவஸ்தான திருகோயில்களில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும், முருகனின் ஆறுபடைவீடுகளுக்கு இணையாக கருதப்படும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதகராக சுப்பிரமணியர் ஆறுமுகங்களுடன் காட்சியளிப்பது மேலும் சிறப்பாகும். இந்தியாவின் தேசியபறவையும், முருகனின் வாகனமுமான மயில்கள் இம்மலையை சுற்றி கூட்டம் கூட்டாமாக சுற்றி திரிவது பார்பவர்களின் மனதை கொள்ளை கொள்ளும்.
இக்கோயிலில் உள்நாடுகளில் இருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருடம் தோறும் வந்து சுவாமி வழிபாடு செய்வது வாடிக்கை
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்காண விழா செவ்வாய்க்கிழமை சொக்கப்பனை நிகழ்ச்சியுடன் தொடங்கியது, அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு முருகனுக்கு வெள்ளிகாப்பு அலங்காரத்துடன் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
அன்று மதியம் முதல் மலைக்கோயிலில் பக்தர்கள் குவியத்தொடங்கினர். அதனைத் தொடர்ந்தது மாலை 6.05 மணிக்கு, மலைமேல் உள்ள ராஜகோபுரம் மேற்புற மண்டபத்தில் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார்த்திகை தீப கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தீபத்திருவிழாவை காண்பதற்கு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வழிகள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் விபூதி, பொங்கல், புளியோதரை, சுண்டல் வழங்கப்பட்டது.
விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஆர். கருணாகரன், மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து, கிரிவலக்குழுத்தலைவர் வி. முருகேசன் உள்ளிட்ட கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.