முகப்பு
தமிழ்நாடு

மத்திய குழு புதுச்சேரிக்கு வராததற்கு மாநில அரசே காரணம்: திமுக புகார்

மழை சேதங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழு புதுவைக்கு வராததற்கு மாநில அரசே காரணம் என திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

மழை சேதங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழு புதுவைக்கு வராததற்கு மாநில அரசே காரணம் என திமுக தெற்கு மாநில அமைப்பாளர் இரா. சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு செயலற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக கனமழை பெய்துள்ளது. புதுச்சேரியில் சுமார் 70  செமீ மழை பெய்துள்ளது.

மாதக்கணக்கில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில  நாட்களிலேயே கொட்டித்தீர்த்ததால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  பயிர்செய்யப்பட்டிருந்த அனைத்துவிதமான பயிர்களும் ஏக்கர் கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது.  மழையின் காரணமாக வியாபாரமும் முற்றிலுமாக முடங்கிவிட்டது. சிறுதொழில்  செய்யும் வணிகர்களும் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாவட்டமான கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு மத்திய நிபுணர் குழு  மழை சேதத்தை பார்வையிட்டு வருகிறது. தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட கண்டமங்கலம், ரெட்டிச்சாவடி, கோட்டகுப்பம்  ஆகிய பகுதிகளை பார்வையிடும் மத்திய நிபுணர் குழு புதுச்சேரி பகுதிகளை  பார்வையிடாமல் செல்வதற்கு என்.ஆர்.காங்கிரஸ் அரசே காரணம்.

மழை சேதங்களை உடனடியாக கணக்கிட்டு மத்தியக் குழுவை புதுச்சேரிக்கு அழைக்க வேண்டியது  புதுச்சேரி அரசின் கடமை. இந்த கடமையிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் அரசு  தவறியுள்ளது. பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உரிய நிவாரணத்தை அறிவித்து, உடனடியாக வழங்க வேண்டும் என்றார் சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.