அழிந்து வரும் நிலையில் நீலகிரி மார்டென்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கே உரிய அரிய வகை உயிரினமான "நீலகிரி மார்டென்' எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கே உரிய அரிய வகை உயிரினமான "நீலகிரி மார்டென்' எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுப்படுவது, காடுகள் அழிக்கப்படுவது ஆகியவற்றால் "நீலகிரி மார்டென்' இப்போதெல்லாம் இயற்கை ஆர்வலர்களுக்கு அரிதாகவே காட்சியளிக்கிறது.
நீலகிரி மார்டென் (சண்ப்ஞ்ண்ழ்ண் ஙஹழ்ற்ங்ய்) என ஆங்கிலத்திலும் "கொம்பு புலி' என பொதுவாக அழைக்கப்படும் இது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும் மிக அரிதான உயிரினங்களில் ஒன்று.
நீலகிரி மார்டென் மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினமாகும்.
நீலகிரி மார்டென் வால் தவிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும் வால் 40 முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். எடை ஏறத்தாழ 2.1 கிலோ கொண்டது.
நீலகிரி மார்டென் பகலில் வேட்டையாடும். மரத்தை வாழிடமாகக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தரைக்கு வரும். இந்த உயிரினம் சிறு பாலூட்டிகள், பறவைகள், பூச்சி முதலானவற்றை உணவாகக் கொள்கிறது.
மலையின் வளங்கள்: மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நீலகிரியில் புலி, யானை, கரடி, கொம்பு புலி, செந்நாய், பழுப்பு மரநாய், அலங்கு, சிறுத்தைப் பூனை, வரையாடு, நீலகிரி கருமந்தி, சிங்கவால் குரங்கு, பறக்கும் அணில் மலபார் முள்வால் எலி, பெரிய இருவாசி, கருப்பு மரங்கொத்தி, காட்டுக்குருகு, கருநாகம், பறக்கும் பல்லி, பல வகையான பூச்சிகள் மற்றும் பல தாவரங்கள் உள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் நீலகிரி மார்டென் உயிரினத்தை எளிதாக காணலாம். மரத்துக்கு மரம் தாவுவதை சுற்றுலா செல்பவர்கள் எளிதாக கண்டு மகிழ்ந்தனர்.
ஆனால், இப்போதோ நீலகிரி மார்டெனை காணுவது அரிதாகி வருகிறது. மேலும் நீலகிரி மார்டென் அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை உணவுகள்: நீலகிரி மார்டென் பெரும்பாலும் மனிதர்களை தவிர்க்க கூடியவை. ஆனால் அண்மை காலங்களில் மனிதர்கள் காடுகளில் வீசும் உணவுப் பண்டங்களையும் உண்ணத் தொடங்கிவிட்டதாக வன உயிரின ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நீலகிரி மார்டென் வனத்தில் கிடைக்கும் பழங்கள் போன்றவற்றை உள்கொள்ளும் போது விழும் எச்சத்தால், செடிகள் முளைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று செடிகள் முளைப்பதால், மான் போன்ற விலங்குகளுக்கு உணவு எளிதில் கிடைத்தது.
இந்நிலையில், வனத்தில் போதிய உணவு கிடைக்காத நிலையில், வனத்தை விட்டு சமவெளிப் பகுதிக்கு வந்த நீலகிரி மார்டென் மனிதன் தூக்கி எறியும் உணவை உட்கொள்ள தொடங்கியுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: நீலகிரி மார்டென் சாதுவாக தெரிந்தாலும் முன்பெல்லாம் மனிதன் அதனை சீண்டினால் கடித்துவிடும். ஆனால், இப்போது சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அவை மனிதனுடன் இணைந்து வாழ பழக்கப்பட்டுவிட்டது.
எனவே அவை மனிதன் தரும் உணவுகளையும் உட்கொண்டு அழியத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மார்டென் அதிகமாக களக்காடு, தேனி, நீலகிரி, முதுமலை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன என்றார் அவர்.