கார் டயர் வெடித்து பைக் மீது மோதல்: பொறியாளர் உள்பட 2 பேர் பலி
விருதுநகர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பொறியாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(45), இவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருடன் திருநெல்வேலியில் நாளை நடைபெற இருக்கிற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆம்னி காரில் சென்றார்களாம். காரை ஹரிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றாராம். விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் அக்ரார்பட்டி அருகே சென்ற போது திடீரென முன்பக்க கார் டயர் வெடித்தில், கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற சாத்தூரைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சுப்பிரமணியன்(45) மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், ஹரிகிருஷ்ணன் தாயார் லட்சுமியம்மாள்(65) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த ஹரிகிருஷ்ணன், அவரது மனைவி முத்துலட்சுமி, மகள்களான ஜெனிபர்(17), ஜெனி(15), பிளக்ஸி(12), உறவினரான சங்கர், அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
அதற்கு முன்னதாக அவ்வழியாக முதலிபட்டியில் மருத்துவமுகாமை தொடங்கி வைத்துவிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் விருதுநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விருதுநகர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சுப்பிரமணியனை, தனது காரில் ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர முதலுதவிக்கு பின், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.