முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் நிர்வாகம் குறிப்பிடும் நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளை நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களை ஆட்சியர் வே.ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On : 2 செப்டம்பர், 2015 at 8:27 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:06 PM

விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளை நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே கரைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களை ஆட்சியர் வே.ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

குடிநீர் ஆதாரத்தை தரும் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளை பாதுகாப்பதில் பொதுமக்களுக்கு பெரும் பங்குள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது. அப்போது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், ரசாயன கலவையில்லாத கிழங்கு மாவு, மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான சிலைகளையே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

Advertisement

அதிலும், வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் கண்காணிப்பளர் ஆகியோர் குறிப்பிடும் நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.

அந்த வகையில் விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து வரும் சிலைகள் கல் கிடங்கிலும், ஆவுடையபுரத்தில் இருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தாத கிணற்றிலும், சிவகாசி நகர் புறங்களில் வரும் சிலைகள் தெய்வானை நகரிலும், எம்.புதுப்பட்டி-மாரனேரி பகுதிகளைச் சேர்ந்தோர்  மடவார்குளம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை நகரத்திலிருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரிய கண்மாயிலும், பந்தல்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி பெரியகண்மாயிலும் கரைக்க வேண்டும்.

அதேபோல், ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் இருந்து வரும் சிலைகள் ஜெயவிலாஸ் பேருந்து நிறுவனத்திற்கு எதிரேயுள்ள வடுவூரணியிலும், அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்தில் இருந்து வரும் சிலைகள் அப்பகுதியில் உள்ள உபயோகிக்காத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து வரும் சிலைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்குளத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்திலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனேரி குளத்திலும், கிருஷ்ணன்கோவில் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயிலும், குன்னூர் சிலைகள் கண்மாயிலும், வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயிலும் கரைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.