முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா ஊராட்சிகள் உருவாக்கம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் சார்பில் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2015 at 7:03 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:11 PM

விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் சார்பில் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது:

ஒவ்வொரு ஊராட்சிகளையும் சுகாதாரமான ஊராட்சிகளாக மாற்ற ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களும், ஊராட்சி தலைவர்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும். அதோடு, பல்வேறு அணுகுமுறைகளின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊராட்சிகளில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

Advertisement

இதை நிறைவேற்றும் வகையில் இம்மாவட்டத்தில் முதல்கட்டமாக மீனாட்சிபுரம், அயன்கொல்லங்கொண்டான், ஆர்.ரெட்டியபட்டி, சாமிநாதபுரம், கோவிந்தநல்லூர், துலுக்கப்பட்டி, பூவநாதபுரம், பூலாவூரணி, கல்லமநாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, கொங்கன்குளம், ஏ.ராமலிங்காபுரம், பெத்துரெட்டிபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, கோட்டூர், கஞ்சமநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, அரசகுளம், சவ்வாசுபுரம், திம்மாபுரம் ஆகிய 20 ஊராட்சிகள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளாக மாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருகிற 14-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்களை பங்கேற்க செய்வதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தி, தனிநபர் கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி வருகிற 30ம் தேதிக்குள் கழிப்பறைகள் கட்டவும், கட்ட இடம் இ்லலாதவர்கள் பயன்படுத்தும் வகையில் பொது சுகாதார வளாகத்தையும் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் இடங்களை கண்டறிந்து அங்கு முள்புதர்களை அகற்றி சுத்தம் செய்து மின் விளக்குகள் அமைத்து அங்கு மரக்கன்றுகள் நடவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேபோல், பள்ளிகளில் கழிப்பிடங்களை பயன்படுத்த ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எனவே திறந்த வெளி கழிப்பிடமாக இல்லாத ஊராட்சிகளை உருவாக்க அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், மகளிர் திட்ட அலுவலர் விஜயலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, ஒன்றியக் குழு தலைவர்கள் கி.கலாநிதி (விருதுநகர்), சுப்பிரமணியம் (சிவகாசி), பொன்னுத்தாய் (ராஜபாளையம்), பி.ஆனந்தவள்ளி (நரிக்குடி), மோ.இந்திரா (திருச்சுழி), சு.கொண்டம்மாள் (வத்திராயிருப்பு), காளிமுத்து (ஸ்ரீவில்லிபுத்தூர்) மற்றும் ஊராட்சி தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.