விராலிமலை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
விராலிமலை, அன்னவாசல், இலுப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விராலிமலை, அன்னவாசல், இலுப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று(வியாழக்கிழமை) காலை முதல் கடை வீதிகளில் மக்கள் குவிய ஆரம்பித்தனர். கடைவீதி மற்றும் சாலையோர கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்து விழாவுக்குத் தேவையான பூஜை பொருள்களை வாங்கிச் சென்றனர்.
விழாகாலம் என்பதால் இந்த ஆண்டு அனைத்து பொருள்களின் விலையும் சற்று கூடுதலாக இருந்தது. 5 ரூபாய்க்கு விற்கப்படும் எருக்கம்பூ மாலை 10 முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டது. கதம்பம் பூ ஒரு முழம் 20 ரூபாய் வரையில் விற்கப்பட்டது. மேலும் ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு போன்ற பூஜை பழங்களும் அதிக விலையில் விற்கப்பட்டன.
விராலிமலை, அன்னவாசல், இலுப்பூரில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களும் வர்ணம் பூசப்பட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒலி பெருக்கிகள் மூலம் விநாயகரின் பாடல் பாடிக்கொண்டிருந்தன. பல்வேறு விநாயகர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஹோமமும், 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனக் காப்பு அலங்காரமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகப் பெருமானை தரிசித்து சென்றனர். பின்னர் இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விராலிமலையில் 15, அன்னவாசலில் 20, இலுப்பூரில் 24 சிலைகள் என பொது இடங்களில் மொத்தம் 59 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.