முகப்பு
தமிழ்நாடு

விஷ்ணுபிரியா வழக்கை சிபிசிஐடி திசைதிருப்பக் கூடாது: தமிழிசை சௌந்தர்ராஜன்

விஷ்ணுபிரியா வழக்கை சிபிசிஐடி திசைதிருப்பக் கூடாதென பாஜக மாநிலத்தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

விஷ்ணுபிரியா வழக்கை சிபிசிஐடி திசைதிருப்பக் கூடாதென பாஜக மாநிலத்தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துக் கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ளது. விஷ்ணுபிரியாவின்  வீட்டிற்கு இன்று வந்திருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் சட்டமும், வழக்கும் எதை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியெழுகிறது. எனவே, இதில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரிலும், புழல் சிறையிலும் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது போலீஸாருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை காட்டுகிறது. பெண் போலீஸார் உயர் அதிகாரிகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு மேல் அதிகாரியின் அழுத்தமே காரணமாகும். அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழக்குத் தொடர்பாக விஷ்ணுபிரியாவை பல மணி நேரம் நிற்கவைத்தே பேசியுள்ளார். மேலும், பெண் என கொச்சைப்படுத்தியுள்ளார். எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே சிபிசிஐடி உள்ளதால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காத என நாங்களும், விஷ்ணுபிரியா பெற்றோர்களும் நம்புவதால் இதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். குற்றம்சாட்டப்பவர்களே வழக்கினை விசாரிப்பதால் இந்த வழக்கை திசை திருப்பும் நிலை ஏற்படுகிறது. அவரின் மரணத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது.

தமிழக போலீஸாரின் நிலையும் மிகவும் பரிதாபமாக உள்ளதால் காவலர் நலச்சங்கம் துவங்க வேண்டும். பெண் காவலர்கள், அதிகாரிகளது மன உளைச்சலை சரி செய்திடும் வகையில் ஓய்வுப்பெற்ற நீதிபதி, காவல்துறை அதிகாரி, மருத்துவர்கள் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.

அப்போது கட்சியின் மாவட்டத்தலைவர் சுகுமாறன், நகரத் தலைவர் சங்கர்கணேஷ், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் மு.சக்திகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →