இனிப்பில் தங்கிய கசப்பு
அம்மா பதறிக் கொண்டு என்னை எழுப்பியபோது, பாதித் தூக்கத்தில் அம்மா சொன்னதை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
திங்கள்செல்வன்
'குழாயில தண்ணீ வரல ராசா...'
அம்மா பதறிக் கொண்டு என்னை எழுப்பியபோது, பாதித் தூக்கத்தில் அம்மா சொன்னதை முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
'என்னம்மா...?'
வெறுப்புடன், உடைந்த குரலில் முனகிக் கொண்டு போர்வையை உதறினேன்.
'குழாய்ல தண்ணீ வரல...'
அதே பதற்றம்.
செல்போனை எடுத்து வாட்ஸ் ஆப்-யைத் திறந்து பார்த்தேன். அபார்ட்மென்ட்ஸ் குரூப்பில் தகவல் வந்திருந்தது. 'நேற்று மாலை நீர்த் தொட்டி கழுவப்பட்டது. காலையில் நீர் ஏற்றப்படும். 7 மணிக்கு தண்ணீர் கிடைக்கும்'
செல்போன் மணி 6.01 காட்டியது.
'அம்மா, 7 மணிக்கு தண்ணி வந்துடும். போ... எதுக்கு இப்படி பதறிக்கிட்டு...'
அம்மாவின் முகத்தில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தாலும் என்னை தூக்கத்தில் எழுப்பிவிட்ட வருத்தம் விரியத் தொடங்கியது.
'போ... காபி போடு. வரேன்...'
மனைவி பாட்மின்டன் விளையாட முன்பே கிளம்பிவிட்டிருந்தாள். குளியல்அறைக்குப் போய், தூக்கக் கலக்கத்தில் கண்ணாடியைப் பார்த்து தலைமுடியை சரி செய்துகொண்டு பிரஷை எடுத்து பற்பசை தடவியபடி பக்கெட்டை பார்த்தேன். காலியாக இருந்தது. விளையாடக் கிளம்பும்முன்பாக, குழாயில் தண்ணீர் வராததால் பக்கெட் தண்ணீரை காலி செய்திருப்பாள். என் போனை எடுத்து குரூப் மெசேஜ் பார்த்திருப்பாள். அம்மாவுக்குச் சொல்லியிருக்கலாம்.
நான் சமையலறைக்குப் போனேன்.
ஒரு பாத்திரத்தை எடுத்து ஆர்.ஓ. அமைப்பில் தண்ணீரைப் பிடித்தேன்.
'யப்பா... பல் வெளக்கறதுக்கும் இதுவா... எப்படிப்பா நா சமைப்பேன்...'
'நீ சமைக்க வேண்டாம். நான் ஆர்டர் பண்றேன்...'
'இது ஒண்ணு கத்துக்கிட்டீங்க... எது கேட்டாலும் ஆர்டர் போட்டுடறேன்... ஆர்டர் போட்டுடறேன்னு. சம்பாதிக்கிறத புடுங்கித் தின்ன ஊர்முழுக்க கூட்டம்கூட்டமா இருக்கானுங்க...'
நான் பதில் சொல்லவில்லை.
தொடக்கத்தில் இந்த அபார்ட்மென்ட்டுக்கு வந்த புதிதில் இரண்டு மாதங்களுக்கு தண்ணீர் கேன் வாங்கினேன். ஒரு கேன் விலை 50 ரூபாய் என்பது அம்மாவுக்குப் பெரும் கவலையாக இருந்தது. 'அரிசி களையறத்துக்கும் தண்ணிய பணத்துக்கு வாங்கினால் என்ன குடும்பம்!' என்று பதறுவாள். ஆர்.ஓ. அமைப்பை நிறுவியபோது, அவளுக்கு கொஞ்சம் நிம்மதியானது. அம்மா எப்போதும் இப்படித்தான். தண்ணீர், பணம் இரண்டும் அவள் அகராதியில் மிகப் பெரிய விஷயங்கள்.
நானும் மனைவியும் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறபோது, ஞாயிறுதோறும் ஓட்டல் போகாமல் முடியுமா! நண்பர்கள் விடுவார்களா! ஆகவே வீக் என்ட் என்றால் எங்காவது செல்வது, நண்பர்களுடன் வெளியே போவது நடக்கிறது. சில நேரங்களில் அம்மாவையும் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல நேர்கிறது.
ஒருமுறை ஒரு பரிசாரகன் அவளிடம் ஒரு மெனு கார்டு- சாரி மெனு புக்- கொடுத்துவிட்டான். அவளுக்கு ஆங்கிலப் புலமை இல்லை என்றாலும் படித்துவிடுவாள். அவள் பார்வை உணவுப் பட்டியலைவிட, அதன் அருகே இருக்கும் விலையைத்தான் பார்த்துக்கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில், 'என்னப்பா இது... ஒரு காபி 170 ரூபாயா! நாம வேறு ஓட்டலுக்குப் போலம்பா...' என்றாள்.
அன்றைய தினம் அவள் மிகக் குறைந்த விலையாக 275 ரூபாயில் தயிர்சாதத்துடன் முடித்துக் கொண்டாள். நான், மனைவி, நண்பர் எல்லாரும் ஆடு, கோழி, மீன் என்று அள்ளித் தின்றோம்.
டாக்ஸியில் ஏறும்போதெல்லாம்... இப்ப கார் வாங்கியாயிற்று... அதற்கான கட்டணம் என்ன ஆனது என்பதில் அம்மா குறியாக இருப்பாள்.
நான் பணமாகக் கொடுத்தால் அவள் எவ்வளவு என்று கணித்துவிடுவாள் . இப்ப ஜி.பே என்பதால் அவளுக்குத் தெரிவதில்லை . ஆனாலும் விட மாட்டாள். வீடு வந்தவுடன் 'எவ்வளோ ஆச்சி ராஜா?' என்று ரகசியமாகக் கேட்டாள்.
'ஒண்ணும் ஆயிடல...' என்று நானும் ரகசியமாகச் சொல்வேன்.
'எவ்வளவுதாம்பா ஆச்சு. நாளைக்கு நானே போறேனு வச்சுக்க ... ஒரு கணக்குத் தெரிய வேண்டாமா...?' என்று நியாயமாகக் கேட்பாள். சொன்னால் அவள் கவலைகள் தொடங்கிவிடும்.
மனைவி போன் பேச அல்லது லேப்டாப்பில் வேலை பார்க்க படுக்கை அறைக்குச் செல்லும் நேரத்தில், 'இதெல்லாம் தேவையா ராஜா, வீட்ல சமைச்சு சாப்பிடலாம்பா... நாலு காசு சேத்து நிலம், வீடு வாங்கணும்... இந்த ஆடம்பரம்கூடாது' என்பாள்.
இரண்டு நாள்களுக்கு நான் தனியாக இருந்தால் இதையே உருவேற்றுவாள். கேட்டுக் கேட்டு எனக்கு மரத்துப் போனது.
வீட்டின் வாடகை 35 ஆயிரம் ரூபாய் என நான் சொல்லவில்லை. மனைவி போனில் யாரிடமோ பேசும்போது சொன்னதைக் கேட்டுவிட்டாள். அவள் மூர்ச்சையாகாத குறை. 'சிங்கிள் பெட்ரூம் பாரேம்பா... எனக்கு எதுக்கு தனி ரூம்...' என்று புலம்பத் தொடங்கினாள்.
அவளுக்கு இன்றைய உலகம், பொருளாதாரம், விலைவாசி, என் சம்பளம் எல்லாவற்றையும் விளக்கி, ஒரு வகுப்பு எடுக்க நேர்ந்தது.
மும்பது வருஷத்துக்கு முன்ன நம்ம தாத்தா மாசம் 300 ரூபாய்ல குடும்பம் நடத்தியிருக்கலாம். நீ குடும்ப வாழ்க்கையை தொடங்கின புதுசுல அதே 300 ரூபாய் செலவழிச்சியா! 3000 ரூபாய் ஆச்சுல்ல. இப்ப நான் 30 ஆயிரம் செலவு பண்றேன். இப்ப என் சம்பளம் 1 லட்சம் ரூபாய். டவுனில் எல்லாருக்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு வாடகைக்குப் போகும். இதெல்லாம் கணக்குப் பாக்காம செலவு பண்ணனும்.
'நீ பண்ணுவ. ஏழை என்ன பண்ணுவான். ஆட்டோகாரனுக்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்துல நீ 100 ரூபா வீசுவ. அதையேதானே அவன் ஏழை கிட்டயும் கேப்பான். பாத்திரம் கழுவுற சத்யாவுக்கு நீ 3 ஆயிரம் குடுக்கிற. அவ ரெண்டு வீட்ல வேலை செய்யறா. 6 ஆயிரத்துல குடும்பத்த நடத்தறா. அவ என்ன பண்ணுவா. ஐ.டி.யில சம்பாதிச்சா அள்ளித் தெளிக்கணும்னு என்ன கட்டாயம்?'
'உங்க எல்லாருக்கும் ஐ.டி. வேலையில சம்பாதிக்கிறவன் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். சம்பள உயர்வு கேக்கிற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் கண்ணுக்குத் தெரியாது. ஐ.டி.யில் வேலை செய்யறவனாலத்தான் விலைவாசி உயருது. வாடகை கூடுது...'
கொஞ்சம் கோபமாகவே கத்தினேன்.
அதன்பிறகு இந்தப் பண விவகாரம் குறித்து அம்மா என்னிடம் பேசுவதில்லை. அதற்காக கவலைப் போய்விட்டது என்று அர்த்தமில்லை. நான் பாடம் எடுப்பேன் என்று அதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால், இந்தத் தண்ணீர் அவளை உலுக்கி எடுத்துவிடுகிறது. குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் பதறிப்போய், எல்லாரையும் என்னமோ ஏதோ என்று கவலையில் தள்ளிவிடுவாள்.
இந்த வீட்டை நான் பேசி முடித்து, பால் காய்ச்சுவதற்காகத்தான் அவளை அழைத்துவந்தேன். அவளது முதல் கேள்வி- தண்ணீ வசதி இருக்கா என்பதுதான். பால் காய்ச்சியபோது உதவிகள் செய்த வாட்ச்மேனை வரச் சொல்லி, டீ கொடுத்தேன். அந்த டீயை அவன் முடிப்பதற்குள், கேள்விகளைத் தொடங்கிவிட்டாள்.
இங்கே எப்ப கார்ப்பரேஷன் தண்ணீ வரும், தண்ணீ வரலன்னா போர் போட்டு இருக்கா, எத்தனை அடி ஆழம் போட்டிருக்காங்க... தண்ணீ தட்டுப்பாடுன்னா லாரியில் வாங்கி தொட்டியில ஊத்துவீங்களா? ஐயோ... அதுக்கு எவ்வளவு செலவு, நான் ரெண்டு குடம் செலவு பண்ணுவேன், மத்தவங்க இஷ்டத்துக்கும் தண்ணிய வீண் பண்ணுவாங்க... இது என்ன கணக்கு?
பாவம், அவன் அந்த ஒரு டீயைக் குடித்து முடிக்கப் பெரும் பாடு படவேண்டியதாயிற்று. அவன் போனதும் மருமகள் அத்தைக்கு வகுப்பு எடுத்தாள்.
'அத்தை, இங்க 16 வீடு இருக்கு. எல்லாத்துக்கு தனி மீட்டர் இருக்கு. யார் யார் எவ்வளவு தண்ணீ செலவழிக்கிறோம்னு கணக்கு பார்க்கலாம். அதுக்கு ஏத்தாப்ல டிவைட் பண்ணுவாங்க... இந்த ஏரியாவுல தண்ணீ பிரச்னையே வந்தது கிடையாதாம்.'
அம்மா மனம் குளிர்ந்தாள்.
ஆனாலும், இப்படி அடிக்கடி தண்ணீர் பதற்றம் ஏற்பட்டுவிடும். இந்தப் பதற்றத்தை எனக்கு மட்டுமே பற்ற வைப்பாள். மருமகளிடம் சொல்ல மாட்டாள்.
என்னைப் பதற வைக்கும்போதெல்லாம் நான் சலிப்படைந்து கத்துவேன். 'இப்ப என்ன? எதையும் பண்ணாத. பேசாம உக்காரு... உனக்கு வேண்டியது வந்து சேரும்' என்று சத்தம் போடுவேன். அத்தைக்காக மருமகள் குறுக்கே வருவாள். 'ஏன் கத்தற... தண்ணீ இல்லன்னா எப்படி சமைப்பாங்க... அம்மான்னா கத்துவியா?' (இந்தக் கடைசிவார்த்தைக்கு இன்னொரு அர்த்தம்- மனைவி என்கிட்ட கத்திப்பாரேன் என்கிற சவால்!). நான் அடங்கிவிடுவேன்.
பெரியம்மா ஒருமுறை இங்கே ஓர் உறவினர் கல்யாணத்துக்கு வந்து, வீட்டில் தங்கினார். அவரது வருகை என் அம்மாவின் மீதான பார்வையை மாற்றிவிட்டது. கத்துவது முற்றிலும் நின்றுபோனது.
பெரியம்மா ஊருக்குப் புறப்பட்டபோது, ரயில் நிலையத்துக்கு அழைத்துப்போய், ரயில் பெட்டியில் உட்கார வைத்துவிட்டு, அவளுக்குக் கொஞ்சம் பழம், தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து கொடுத்தேன். இப்போதெல்லாம் மார்க்கெட் உத்தி, சின்ன வாட்டர் பாட்டில் விற்க மாட்டான். 2 லிட்டர் பாட்டில்தான் விற்பான். வேறு வழியின்றி வாங்கித்தான் ஆக வேண்டும்.
பெரியம்மாவிடம் கொடுத்ததும், அவள் சிரித்துக் கொண்டே, 'நான் ரெண்டு வாய் தண்ணீ குடிச்சாலே அதிகம். எதுக்குடா 2 லிட்டர்?' என்றாள்
'நீயும் உன் தங்கைய போலவே பேசற பெரிம்மா...'
அம்மாவின் தண்ணீர் பயம் குறித்து அவளிடம் கேலியாகச் சொன்னபோது, அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள். பிறகு சொன்னாள்.
'தண்ணீக்காக அவ பட்ட கஷ்டம் அப்படிடா... நெனச்சால எனக்கு கண் கலங்கும்...'
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் தொடர்ந்து பேசினாள்.
'ஆமாடா... அம்மம்மாவுக்கு நாங்க மூணு பேரு. மீனாக்கா சீக்கிரமே கல்யாணமாகிப் போயிட்டா. 1976 இல்ல 77 இருக்கும். வறட்சின்னா அப்படியொரு வறட்சி. மழை கிடையாது. தண்ணிப் பஞ்சம். அப்ப இந்த நகராட்சி சின்னது. இப்ப மாதிரி லாரி கிடையாது. ஜனங்க எல்லாம் எந்த வீட்டுக் கிணத்துல தண்ணீ இருக்கோ அங்க போய் கெஞ்சி கூத்தாடி தண்ணீ சேந்தி எடுப்பாங்க. நான் 20 வயசுங்கறதால அம்மம்மா என்னை வெளியே அனுப்ப மாட்டாங்க. எல்லாத்துக்கும் உன் அம்மாதான் போகணும்.
அந்த ரெண்டு வருஷமும் அவ ராத்திரி பகல்னு இல்லாமல் தண்ணீ எடுத்து வந்தா, நாலாவது தெருவுல அடிபம்புல தட்டாம தண்ணீ வருதுன்னு அங்க போய் அடிச்சு எடுத்துவருவா. பக்கத்து தெரு அத்தை வீட்டுக் கிணத்துல தண்ணி இருக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு அந்த பாட்டிகிட்ட கெஞ்சி கூத்தாடி எடுத்துட்டு வருவா... அவ மட்டும் இல்லன்னா நாங்க அவ்வளவுதான்.
தெருக் குழாய்ல தண்ணீ எப்ப வுடுவான்னே தெரியாது. 'குழாய்ல தண்ணீ வருதும்மா' என்ற ஒரு குரல் கேட்டா போதும், ராத்திரி எந்த நேரமாக இருந்தாலும் எல்லாரும் ஓடிப்போய் வரிசையில நின்னு தண்ணி புடிப்பாங்க. பல நாள்ல ரெண்டாவது ஆட்டம் முடிஞ்சு ஜனங்க போறப்பதான் தண்ணீ வரும். அந்த இருட்டுல கூட்டம்கூட்டமா போய் தண்ணீ புடிப்பாங்க. ஆளுக்கு ரெண்டு குடத்துக்கு அதிகமா புடிச்சா அடிதடி நடக்கும். அங்கயும் உன் அம்மாதான் போய் அந்த ராத்திரியில் நின்னு, 'அக்கா அக்கா'ன்னு கெஞ்சி நாலு குடம் தண்ணி எடுத்து வருவா.
வீட்டு ஆம்பளைங்க ஆத்துக்கு சைக்கிள்ல போய் தண்ணீ எடுத்து வருவாங்க. தெருவுல எப்பவும் யாராவது ஒருத்தர் சைக்கிள்ல தண்ணீ எடுத்துட்டுப் போய்க்கிட்டு இருப்பாங்க. சைக்கிள் பேக் சீட்ல இரண்டுபக்கமும் இரண்டு பிளாஸ்டிக் குடம் கயித்துல கட்டித் தொங்கும். ஸ்டான்ட்ல ஒரு குடம் இருக்கும். அது அலம்பாம இருக்க துணி போட்டு மூடினால் வீட்டுக்கு வர்றதுக்குள்ளார கால்வாசி குடம் ரோட்ல சிதறிப்போயிடும். ஆனாலும் வேற வழி... அப்படியான தண்ணி பஞ்சம். அவ ஒருத்திதான் எல்லா இடத்துக்கும் சுத்தி அலைஞ்சி தண்ணீய கொண்டுவந்து நிரப்புவா.
அப்பா குளிக்கப் போறச்ச, 'ரெண்டாவது தடவ சோப்பு போடாதீங்க... அவ கஷ்டத்தை நினைக்கணும்னு அம்மா சொல்லுவாங்க. நான் அந்த தண்ணிய கக்கூஸூக்கு எடுத்துட்டுப்போறப்பவும், அம்மம்மா கத்துவாங்க. 'பாத்து செலவு பண்ணுங்க. அவ கஷ்டத்தை நினைச்சு கழுவுங்க'ன்னு பெரியம்மா சொல்லிவிட்டு வாய் பொத்தி சிரித்தார்கள்.
'ஏன்? பாத்ரூம்ல தண்ணி வராதா?'
'டேய்... கதையா சொல்லிட்டு இருக்கேன். அப்பல்லாம் டேங்க் கட்டி, ரன்னிங் வாட்டர் வசதி இருக்கிற வீடு ஊருக்கு நாலு அஞ்சுதான் இருக்கும். அந்தக் காலத்துல சின்ன டவுன்ல எடுப்புக் கழிவறைதான் 90 சதவீதம். நீ மெட்ராசுல பொறந்ததாலே உனக்குத் தெரியாது. நீ பொறக்கறச்சே எல்லாம் மாறத் தொடங்கிடுச்சு. அரிசி களைஞ்ச தண்ணிய செடிக்கு ஊத்துவோம். வெட்டின காய்கறி மிச்சத்தையும் செடிக்குத்தான் உரமா போடுவோம். துணி தொவிச்சி அலசின சோப்பு தண்ணிய கக்கூஸ்ல ஊத்துவோம்... இப்ப அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது...இன்னிக்கு நீ நல்லா சம்பாதிக்கிற. வேணும்னா ஒரு லாரி தண்ணிய வீட்டுக்குக் கொண்டுவருவ. அது உனக்குச் சாத்தியம் . ஆனா அவளுக்கு அந்த வயதுல பட்ட கஷ்டம் மனசுல அப்படியே இருக்கத்தானே செய்யும்?' என்றாள்.
அதன் பிறகு, தண்ணீருக்காக அம்மா பதறும்போது நான் அமைதியாக , அவள் கஷ்டத்தை மனத்திரையில் பார்க்கக் கற்றுக்கொண்டேன். என் கத்தல் நின்று போனது.
ஓட்டல் மேசை விட்டு எழும்போது மினரல் வாட்டர் பாட்டில்களில் பாதிக்கும் அதிகமாக மிச்சம் இருக்கும் பாட்டிலை அம்மா எடுத்துக்கொள்ளும்போது, நான் முறைப்பதில்லை. 'எடுத்துக்கம்மா, வழியில குடிப்ப' என்கிறேன்.