அதிமுகவுடன் எப்படியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்ற நம்பிக்கையில் தென்னந்தோப்பு சின்னம் கேட்டுப் பெற்ற தமாகா, தேர்தல் களத்தில் தனித்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
4 மரங்களைக் கொண்ட தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தபோது ஜி.கே.வாசன் இப்படிக் கூறினார். "பணப் பயிர்களில் தென்னையை மட்டும்தான் தென்னம்பிள்ளை என்று கூறுகிறோம். அந்தத் தென்னம்பிள்ளைபோல தமிழக மக்களுக்காக உழைக்கும் பிள்ளையாக தமாகா இருக்கும்' என்றார்.
அந்தத் தென்னம்பிள்ளை தற்போது வேரூன்றுவதற்கான இடத்தையே முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமாகா தொடங்கிய காலத்தில் இருந்தே, இந்தத் தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறி தனது கட்சித் தொண்டர்களை ஜி.கே.வாசன் உற்சாகப்படுத்தி வந்தார்.
திமுக, மக்கள் நலக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், மீன் பிடிக்கிறவர்கள் தக்கை மேலே கண்ணை வைக்க வேண்டும் என்பதுபோல அதிமுகவுடன் சேருவதிலேயே ஜி.கே.வாசன் ஆர்வம் காட்டி வந்தார். அதிமுகவின் தலைமை நிர்வாகிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை ஜி.கே.வாசன் நடத்தினார். ஆனால், தமாகாவுடன் கூட்டணி இல்லை என்பதை, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதன் மூலம் அதிமுக தெளிவுபடுத்தியுள்ளது.
தொடரும் பேச்சுவார்த்தை: தமாகாவுடன் கூட்டணி இல்லை என்று திமுக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால், தமாகாவுக்கு ஒரே வாய்ப்பாக உள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு அந்தக் கட்சி செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமாகா எந்த அணிக்கும் செல்ல விரும்பவில்லை. அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவுடன்தான் கூட்டணி என்ற மனநிலைக்கு தமாகாவினர் வந்துவிட்டதால், வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாத நெருக்கடியில் ஜி.கே.வாசன் இருந்து வருகிறார்.
இலை அசையுமா?: அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும் என்று தமாகா எதிர்பார்த்தது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டது.
அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன் வந்ததுடன், இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்காமல் பேச்சுவார்த்தையைத் தமாகா இழுத்து வந்தது. இந்த நிலையில்தான், கூட்டணியில் தமாகா இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து, தமாகா தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளது. 15 தொகுதிகள் ஒதுக்கினாலே போதும். ஆனால், தென்னந்தோப்பு சின்னத்தில்தான் நிற்போம். அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்த முடிவை அதிமுக தலைமையிடம் திங்கள்கிழமை (ஏப்.4) தமாகாவின் முக்கிய நிர்வாகி தெரிவித்தார். அதிமுக தனது முடிவை புதன்கிழமைக்குள் (ஏப்.6) தெரிவிக்க வேண்டும் என்றும் தமாகா கேட்டுக் கொண்டுள்ளது. அதிமுகவிடம் இருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவையும் ஜி.கே.வாசன் எடுத்துள்ளார்.
தனித்து ஏன்? மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பலமுறை வலிய வந்து கூப்பிட்டபோது போகாமல், அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று தற்போது தெரிந்தவுடன் எதிர் முகாமுக்குச் செல்வது நன்றாக இருக்காது என்று ஜி.கே.வாசன் கருதுகிறார்.
மேலும், மக்கள் நலக் கூட்டணியை தமாகாவின் முக்கியத் தலைவர்கள் யாரும் வெற்றிக் கூட்டணியாகப் பார்க்கவில்லை. இதனால், அந்தக் கூட்டணிக்குச் சென்று தோற்பதைவிடத் தனித்து நின்று பலத்தைக் காட்டலாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், எதிர்பார்த்த கூட்டணி அமையாததால் தமாகாவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தாவக்கூடும் எனச் செய்திகள் வருகின்றன. தற்போதைய நிலையில், அதிமுக எப்படியாவது தமாகாவை ஏற்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்த பிறகுதான், தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தது. அதுபோல, இப்போதும் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான அதிமுகவின் உத்திதான், தங்களை ஒதுக்கிவிட்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்திருப்பது என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது தமாகா.
அதிமுக தலைமையிடம் இருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்காவிட்டால், தமாகா தனித்தே களம் காணும் என்பதுதான் தற்போதைய நிலைமை.
கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேட்கும் போதெல்லாம், இன்னும் ஓரிரு நாள்களில் பதில் கூறுவேன் என்று சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். ஜி.கே.மூப்பனாரையே விஞ்சும் அளவுக்குக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை இழுத்துக் கொண்டே செல்கிறாரே என்று தமாகாவினரே அலுத்துக் கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகும், கூட்டணி தொடர்பாக இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப் போவதாக வாசன் கூறியுள்ளார். அதிமுக தலைமையின் முடிவில்தான் அந்த ஓரிரு நாள் இருக்கப் போகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.