புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே நாளில் அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் தொடக்கம்
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் சனிக்கிழமை தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் சனிக்கிழமை தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.
புதுச்சேரியில் வரும் மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ்-அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் என இரு கட்சியினரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 4-ம் தேதி புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.
வேட்பாளர்களை அறிவித்தகையோடு, 9-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொள்வேன் என அறிவித்திருந்தார். அதன்படி புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.