அதிக விலைக்கு மின்சாரம்: 'நத்தம்' மீதான புகார் குறித்த விசாரணை நடத்த உத்தரவு
சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தொடர்பான நத்தம் விசுவநாதன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தொடர்பான தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
எஸ்.பி.ஸ்ரீனிவாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
ஆந்திர பிரதேசம் மற்றும் உத்ர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ. 5.01 என்ற விலையில் வாங்கும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் யூனிட்டுக்கு ரூ. 7.01 தருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.
மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் நாகலசாமி தனது குறிப்பில், மின்சார வாரியத்தின் இந்த முடிவு மூலம் ரூ. 25,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரத்துக்கு மார்ச் மாதம் அனுப்பப்பட்ட புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரம் ஸ்ரீனிவாஸின் புகார் குறித்து விசாரணை செய்து ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.