முகப்பு
தமிழ்நாடு

மணிமுத்தாறு மலையில் வைரக்கல் எடுக்க முயற்சி: 7 பேர் கைது

மணிமுத்தாறு மலையில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 7 பேரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருநெல்வேலி: மணிமுத்தாறு மலையில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 7 பேரை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மணிமுத்தாறு மலையில் சிங்கம்பட்டி பீட் எலுமிச்சையாறு சரகத்தில் மர்ம நபர்கள் வைரக்கல் தோண்டி எடுக்க முயற்சிப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரகர்கள் வெள்ளத்துரை (அம்பை), இளங்கோ (கடையம்) ஆகியோர் தலைமையில் வனத்துறையில் செவ்வாய்க்கிழமை எலுமிச்சையாறு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 8 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதியில் குழி தோண்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. வனத்துறை அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். வனத்துறையினர் விரட்டி சென்று 7 பேரை பிடித்தனர்.

சிங்கம்பட்டியை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணியன் (52), மேலப்பாளையத்தை சேர்ந்த அபுல்காசீம் (38), நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தை சேர்ந்தவர் காசி மகன் செல்வகுமார் (30), இதேப் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் சுப்பிரமணியன் (34), நாமக்கல் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கோவிந்தன் (37),

இதேப் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் முருகன் (55), பெருமாள் மகன் ரவி (25) ஆகியோர், சிங்கம்பட்டியை சேர்ந்த சுடலைமுத்து என்பவருடன் சேர்ந்த வைரக்கல் எடுக்க முயன்றது தெரியவந்தது.

இதில் 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பிச் சென்ற சிங்கம்பட்டியை சேர்ந்த சுடலைமுத்துவை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேர்களை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

வனத்துறை பணியாளர்கள் இருவரின் உதவியுடன் இந்த கும்பல் புலிகள் காப்பக வனப்பகுதியில் வைரக்கல் தோண்டி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →