நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைகிறது: கரை சேருமா கார் சாகுபடி?
கார் சாகுபடிக்கு இன்னும் 50 தினங்கள் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் பிரதான அணைகளின் நீர்இருப்பு
திருநெல்வேலி: கார் சாகுபடிக்கு இன்னும் 50 தினங்கள் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் பிரதான அணைகளின் நீர்இருப்பு தினமும் 3 அடி வீதம் குறைந்து வருவது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தாமிரவருணி பாசனத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் கார் பருவ சாகுபடி மேற்கொள்ளப்படும். சாகுபடியில் ஆரம்ப கட்டமாக நாற்றுப் பாவுதல், உழுவு மேற்கொள்ளுதல் போன்ற பணிக்காக பிரதான அணைகளில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்நடைமுறை இருந்து வருகிறது. இதனால் இப்பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே சமயத்தில் விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டு சாகுபடி நடைபெற்று வந்தது.
பிரதான அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத சூழல், பருவ மழை சரிவர பெய்யாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது. கால தாமதமாக சாகுபடி செய்வதால் அறுவடை பருவமும் தள்ளிப் போய் அடுத்த பருவ மழை காலத்தில் நெற்பயிர் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு இழைப்பு ஏற்பட்டு வருகிறது.
நிகழாண்டு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஜூன் மாதமும், கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து ஜூலை மாதத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கியபோதிலும் சரிவர பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் நிகழாண்டு 30 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இதனிடையே பிரதான அணைகளின் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64.40 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.49 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.96 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 497.70 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 9 கனஅடி, கடனாநதி அணைக்கு 57 கனஅடி, ராமநதி அணைக்கு 27.84 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து 904.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் 55 கனஅடி, கடனாநதி அணையில் 80 கனஅடி, ராமநதி அணையில் 40 கனஅடி, அடவிநயினார் அணையில் 25 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பருவ மழை கைகொடுக்காத நிலையில் அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்தவாறு உயரவில்லை. இதனால் கருப்பாநதி, வடக்குப் பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு நிகழாண்டு தண்ணீர் திறக்கவில்லை.
பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்இருப்பு தினமும் 3 அடி வீதம் குறைந்து வருகிறது. கார் சாகுபடிக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அதாவது இன்னமும் 50 நாள்கள் தண்ணீர் வழங்க வேண்டிய சூழலில் பிரதான அணைகளில் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருவதால் கார் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் கடை மடைகளுக்கு தண்ணீர் எட்டாததால் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரின்றி கருகி வருவதாகவும், இதேநிலை நீடித்தால் கார் பருவ சாகுபடி கரை சேருமா என்ற அச்சம் எழுந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.