தமிழ்நாடு

ஆசியாவின் பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின்

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் மிகப்பெரிய கிடங்காகக் கருதப்படும் அரசின் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வேதாரண்யம் வட்டம், கோவில்பத்து கிராமத்தில் ரூ. 144 கோடி மதிப்பீட்டில் இந்தக் கிடங்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

நாகை மாவட்டத்தில் மீன்பிடி, உப்பு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு சார்ந்த வேளாண்மை போன்றவை முக்கியத் தொழில்களாக உள்ளன. இவற்றில் நெல் உற்பத்தியே பிரதானம்.

குறுவை, சம்பா, தாளடி எனப் பல பருவங்களில் நெல் உற்பத்தியாகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவற்றைப் பாதுகாப்பாக சேமித்து வைத்துப் பயன்படுத்த பெரிய அளவிலான கிடங்கு வசதிகள் இல்லாமல், பெரும்பாலான நெல் மூட்டைகள் திறந்தவெளி கிடங்குகளிலேயே சேமிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு குறைந்த இந்தக் கிடங்குகளில் எலி, பெருச்சாலி, பறவைகள் போன்றவற்றால் நெல் மணிகள் சேதப்படுத்தப்படுகின்றன.

மேலும், வெயில், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் மூட்டைகள் பாதிப்புக்குள்ளாகி நெல் மணிகள் முளைத்துவிடுவது போன்ற பாதிப்புகளால் கணிசமான அளவு நெல் வீணாகி வருவது அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, பல தரப்பினரையும் வேதனையடையவே செய்கிறது.

இந்த நிலையில், தற்போது கட்டப்பட்டு வரும் இந்தத் தானிய சேமிப்புக் கிடங்கு நாகை மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

கோவில்பத்து கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்காக 175 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டப் பணியாக 60 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள வளாகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 144 கோடியில் தானியக் கிடங்கு அமைக்கப்படுகிறது.

இந்த வளாகத்தில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் சேமிக்கும் வசதியுடைய ஒரு சேமிப்புக் கிடங்கும், தலா 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் 15 சேமிப்புக் கிடங்குகளும் கட்டப்படுகின்றன.

இந்தக் கிடங்குகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் லாரிகளில் இருந்து கன்வேயர் பெல்ட் உதவியுடன் தானிய மூட்டைகளைக் கையாளும் முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே சேமிப்புக் கிடங்குகள் இருந்தபோதிலும், ஒரே இடத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளைச் சேமித்து வைக்கும் அளவிலான கிடங்கு வசதி வேறு எங்கும் இதுவரை அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கிடங்கு ஆசியாவில் பெரிய கிடங்கு என்ற பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது.

பைல் பவுண்டேஷன் என்ற முறையைக் கையாண்டு கட்டப்படும் இந்தக் கிடங்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி வழிகாட்டுதலின் பேரில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை உருவாக்கும் பணிகளைச் செய்து முடிக்க மூன்று நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்னும் மூன்று மாதங்களுக்குள் பணிகள் செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல் தானியம் தவிர, கோதுமை போன்ற வேறு தானியங்களையும், அவசர காலத்துக்குப் பயன்படும் வகையில் கையிருப்பு வைக்கப்படும் அரிசி போன்றவற்றையும் இங்கு பாதுகாப்பாக வைக்கலாம்.

கிழக்குக் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்தக் கிடங்கை பேரிடர் காலத்தில் மக்களின் பாதுகாப்பு மையமாகவும் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படவுள்ள இந்தக் கிடங்கின் வளாகத்தை சார்ந்து நவீன அரிசி ஆலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.

வேளாண்மை சார்ந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு மத்தியில், உற்பத்தி செய்த தானியங்களைப் பாதுகாக்க இதுபோன்ற கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்துவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT