தமிழ்நாடு

ஜெயலலிதா மறைவு: புதுச்சேரியில் கடையடைப்பு; பேருந்துகள் ஓடவில்லை

DIN

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திங்கள்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, பெரிய மார்க்கெட், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, வில்லியனூர் பகுதிகளில் இருந்த மார்க்கெட்டுகள், பாகூர், திருக்கனூர், காலாப்பட்டு என புறநகர்ப் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
பள்ளி, கல்லூரிகள், விடுமுறை: முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு பேருந்துகளின் இயக்கம் இரவு முதலே முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் புதுவை அரசுப் பேருந்துகள் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தனியார் பேருந்துகளும் புதுவையிலிருந்து இயக்கப்படவில்லை. லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. வாகனப் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.
சுற்றுலா பயணிகள் அவதி: புதுவையில் ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
மத்திய அரசின் உத்தரவின்படி அஞ்சல் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
பலத்த பாதுகாப்பு: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபோன்ற இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டிருந்தது.
மேலும், புதுவையின் முக்கிய பகுதிகள், சந்திப்புகள், எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. நகரில் எங்கும் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT