தமிழகம் முழுவதும் சுமார் 900-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருவதால், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகளின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிஎஸ்சி செவிலியர் படிப்புகளுக்கும், செவிலியர் பட்டயப் படிப்புகளுக்கும் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அங்கீகாரம் இல்லாத செவிலியர் கல்லூரிகள், ம் பள்ளிகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் 23 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளும், சேலம், தேனி, மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் அரசு செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவைதவிர, அங்கீகாரம் பெற்ற 160-க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்திய செவிலியர் குழுமம் (இந்தியன் நர்சிங் கவுன்சில்), தமிழ்நாடு செவிலியர்- தாதியர் குழுமத்தின் சார்பில் அரசு, தனியார் செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள செவிலியர் கல்லூரிகள் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலும், செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலும் செயல்பட்டு வருகின்றன.
செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளின் செயல்பாடுகளை வைத்து, அந்த நிறுவனங்களுக்கான உரிமம் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்படுகிறது. உரிமம் பெற இந்திய செவிலியர் குழுமத்துக்கு ரூ. 10 ஆயிரம், தமிழ்நாடு செவிலியர்- தாதியர் குழுமத்துக்கு ரூ. 7,500 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்துவதற்கு இந்திய செவிலியர் குழுமத்துக்கு ரூ. 15 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுபோன்று செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலை ஒருபுறம் இருக்கையில், அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. தற்போது, மாவட்டத்துக்கு 30- 50 செவிலியர் கல்லூரிகளும், சுமார் 900-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சிப் பள்ளிகளும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
ஆனால், அங்கீகாரம் குறித்து எந்தவொரு கல்வி நிறுவனத்திடமும் கேள்வி எழுப்புவதற்கு மாணவர்கள் மட்டுமன்றி, பெற்றோர்களும் முன்வருவதில்லை. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து செயல்பட்டு வரும் அங்கீகாரம் இல்லாத தனியார் செவிலியர் பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் போதுதான் சிக்கல் தொடங்குகிறது. அங்கீகாரம் இல்லாத செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் வழங்கும் சான்றிதழ்கள் பதிவு செய்யும் போது நிராகரிக்கப்படுவதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்து மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசுத் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் உரிமத்தை புதுப்பித்து அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
அங்கீகாரம் இல்லாத செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் மீது மாணவர்களின் பெற்றோர் அல்லது பொதுமக்கள் தரப்பில் புகார் அளித்தால் மட்டுமே, மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்தந்த மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர்கள் ஆய்வு மேற்கொண்டாலும், அங்கீகாரம் இல்லாத செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நோட்டீஸ் மட்டுமே வழங்க முடியும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளதாக மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் ஒரே பாடத் திட்டம் உள்ள படிப்புகளில் செவிலியர் படிப்பும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் செவிலியர் கல்லூரிகள், பள்ளிகளில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு என மொத்தம் 23 பாடப் பிரிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 23 பாடங்கள் குறித்த விவரங்களை www.tamilnadunursingcouncil.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
பதிவு செய்வது அவசியம்
அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகள், பள்ளிகள் மூலம் பெறும் பட்டம், பட்டயத்தை மட்டுமே தமிழ்நாடு செவிலியர்- தாதியர் குழுமத்திலும், இந்திய செவிலியர் குழுமத்திலும் பதிவு செய்ய முடியும். பின்னர், செவிலியர் தொழில் செய்வதற்கான அனுமதியுடன் மாணவ, மாணவிகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே, உலகம் முழுவதும் செவிலியர்களாகப் பணிபுரியும் வாய்ப்பை ஒருவர் பெற முடியும் என அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.