விராலிமலை அரசுப் பள்ளி மாணவிகள் அசத்திய உணவுத் திருவிழா!
இயற்கையுடன் கலந்த மாற்றமே இன்றைய உலகுக்கு இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வகையில், அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் நடத்திய உணவுத் திருவிழா அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
விராலிமலை: இயற்கையுடன் கலந்த மாற்றமே இன்றைய உலகுக்கு இன்றியமையாதது என்பதை உணர்த்தும் வகையில், அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் நடத்திய உணவுத் திருவிழா அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தவும், அதன் மருத்துவ குணம், உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் முறைகள் குறித்தும் விளக்கிட, இயற்கையுடன் கூடிய மாற்றம் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நடைபெற்ற உணவுத் திருவிழாவை பள்ளி மாணவிகளே நடத்தினர்.இதில், உணவகங்கள் போல அறை உருவாக்கப்பட்டு, மேசை நாற்காலிகள் போடப்பட்டு உணவுவகைகளை உள்ளடக்கிய மெனுகார்டுகளுடன் நடைபெற்ற இந்த உணவு திருவிழாவில் 40 வகையான சத்தான மூலிகை உணவுகளை தயார் செய்து காட்சிபடுத்தியிருந்தனர்.
மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளான, தோசை வகைகள், செம்பருத்தி, முடக்கத்தான்,கேரட், தூதுவளை தோசை, பூசணி அடை, வாழைப் பூ வடை, மணத் தக்காளி சூப், முருங்கைப் பூ சூப், வல்லாரை சட்னி, பிரண்டை துவையல், வாழைத் தண்டு, நெல்லிக்காய் அல்வா, பழ வகைகள், உளுந்து கஞ்சி, கம்பு ரொட்டி, கண்டக் கத்தரி குழம்பு, காளான் சாதம், சாமை சாதம், தினை வகைகள் என பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்து ஆசிரியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்கினர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஜெ. ஆர். அய்யப்பன், பள்ளித் தலைமையாசிரியை கோ. ஜெயந்தி, உதவி தலைமையாசிரியர் ஸ்டீபன்செல்வராஜ், பன்னீர்செல்வம்,ரெஜினா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர்.
இதில், பங்கேற்று உணவுகளை சமைத்து அசத்திய மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.