தமிழ்நாடு

வழக்குகளில் ஆலோசனை கேட்பதற்கவே பிரதமரை முதல்வர் சந்தித்துள்ளார்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

தன் மீதுள்ள வழக்குகளில் ஆலோசனை கேட்பதற்காகவே பிரதமரை முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துள்ளார் என்றார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

மீனாட்சி சுந்தரம்

நாகர்கோவில்: தன் மீதுள்ள வழக்குகளில் ஆலோசனை கேட்பதற்காகவே பிரதமரை முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துள்ளார் என்றார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சந்தை திடல் பகுதியில், கடந்த செப். 27, 2015-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்திம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் விஜயதரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் இருவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக  நாகர்கோவிலில்  உள்ள  மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில்  அரசு வழக்குரைஞர் ஞானசேகரன்,  இருவர் மீதும் தனித்தனியாக  வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக இளங்கோவன்  நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில், அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பணிக்கும், பேருந்து நடத்துநர் பணிக்கும், லஞ்சம் வாங்கிக்கொண்டு வேலை வழங்குகிறார்கள் என்று நான் பொதுக்கூட்டத்தில் பேசினேன். அதற்காக என் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். யார், யார் லஞ்சம் கொடுத்து வேலை பெற்றார்கள்? என்ற பட்டியலை நான் ஆதாரத்தோடு வழக்கு நடைபெறும்போது நிரூபணம் செய்வேன்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவையில் முதன்மையான இடம் தர வேண்டும் ஏனென்றால் அவர் 1957 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார், பல முறை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா தமிழர்களும் மதிக்கக்கூடிய தலைவராக இருக்கக்கூடிய அவருக்கு முதன்மையான இடத்தை அளிக்க வேண்டும்.

நான் ஏற்கெனவே கூறியதைப் போல் பிரதமரும், முதல் அமைச்சரும் 50 நிமிடம் சந்தித்து விட்டு  26 அல்லது 96 கோரிக்கைகளை வலியுறுத்தினார் என்பது கருணாநிதி கூறியது போல கடந்த 6 ஆண்டுகளாக என்ன கோரிக்கையை வைத்தாரோ அதே கோரிக்கையை திரும்ப, திரும்ப சொல்வதற்காக சென்றுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை உறுதியாகச் சொல்லமுடியும், தமிழக மக்கள் நலனுக்காக முதல்வர் பிரதமரை சந்திக்கவில்லை. தன் மீதான வழக்குகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க முடியுமா? என்று பிரதமரிடம் ஆலோசனை கேட்பதற்காக சென்றுள்ளார். முல்லைப்பெரியாறில் நீர்மட்டம்  உயர்த்துவது தொடர்பாக கேரள மாநில முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறேன், அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பிரச்னையாக இருந்தாலும் சரி, காவிரி நீர்ப்பிரச்னையாக  இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதகம் ஏற்படாமல் காங்கிரஸ் கட்சி அதை உறுதியாக பாதுகாக்கும்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அணுகுமுறை மாறியிருப்பதாக கூறுகிறீர்கள், அது உண்மையான தோற்றமா? மாயத்தோற்றமா? என்பதை கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இல்லாவிட்டால் பாஜகவுக்கு டெபாசிட்டாவது கிடைக்கும். டீசல், பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் குறைந்திருக்கும் நேரத்தில் இந்தியாவில் மட்டும் விலையை ஏற்றுவது மிகப்பெரிய மோசடியாகும். மக்களை சுரண்டுகிற செயலாகும்.

குளச்சல் வர்த்தக துறைமுகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே திட்டமிட்ட இடமான குளச்சலில்தான் அமைக்க வேண்டும், அதை விடுத்து இனயத்தில் அமைப்பது என்பது பொன்.ராதாகிருஷ்ணன் யாரோ சிலரின் தனிப்பட்ட சொத்துகளை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

மக்கள் நலக்கூட்டணியை பொறுத்தவரை நான் தேர்தலுக்கு முன்பே கூறியது போல 6 பேர் கொண்ட கூட்டணி என்பது, 4 பேர் தூக்கவும், ஒருவர் சடலமாக இருக்கவும், ஒருவர் சங்கு ஊதி, மணியடிக்கவும் என்று கூறினேன், அதுதான் இப்போது நடந்துள்ளது. மக்கள் நலக்கூட்டணியை சுடுகாட்டில் புதைத்து விட்டு வந்து கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை எப்படியிருக்கிறதோ அப்படித்தான் எங்கள் அணுகுமுறையும் இருக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT