FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மம்சாபுரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் அதிகாரிகளின் மெத்தனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மற்றும் சிலர் தாக்கல் செய்திருந்த பொது நலன் வழக்கின் அடிப்படையில் 2009-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் 50 நகரங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உத்தரவிட்டது.

இதில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சிகள் அடங்கும். இங்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம் பணிகளை வாட்டர் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் தொடங்கியது. மம்சாபுரம் பேரூராட்சியில் ரூ.8 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் கிணறு, ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதன் தொடர்ச்சியாக மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் ஒரு குடும்ப அட்டைக்கு தினமும் 40 லிட்டர் வீதம் 2012 முதல் பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் இப் பகுதியின் குடிநீர் பிரச்னை ஓரளவிற்கு தீர்க்கப்பட்டது.

இந்நிலையில் 2016 ஜனவர் 4-ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் இங்கு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி இத்திட்டத்தை ஒரு ஆண்டில் நிறைவேற்றி, இரு ஆண்டு பராமரிப்பிற்குப் பின் பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இரு ஆண்டு பராமரிப்பிற்குப் பின்னர் மம்சாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ள வாட்டர் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் கேட்டது.

போதிய தொழில்நுட்பம், நிதிவசதி இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தயக்கம் காட்டியது.

பல மாதங்கள் இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. தில்லியில் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 2014 ஆகஸ்டு மற்றும் 2015 ஜூன் மாதங்களில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேரூராட்சி தரப்பில் பராமரிக்க முடிவாகி 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அதன்படி நடைபெறவில்லை. தனியார் நிறுவனமே தொடர்ந்து பராமரிப்பு வேலைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நிதி பற்றாக்குறையால் தனியார் நிறுவனம் குடிநீர் விநியகத்தை 2016 ஜனவரி 4-ம் தேதி நிறுத்திவிட்டனர்.

முரண்பாடான விளக்கம்:

பேரூராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்திடம் இது குறித்து கேட்டபோது திட்ட காலம் முடிவடைந்து விட்டது. பராமரிப்பை பேரூராட்சி தொடர வேண்டும் என்கிறார்கள்.

பேரூராட்சி நிர்வாகம், திட்ட இலக்கான தினசரி 2.40 லட்சம் லிட்டர் உற்பத்தியை அடைந்த பின்னர் பராமரிப்பை ஏற்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் தனியார் நிறுவனத்தினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அலுவல் ரீதியாக நாங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து வி்ட்டோம் என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில் பேச்சு வார்த்தை முடிவுக்கு வரவில்லை. இதனால் தொடர்ந்து சுத்திகரிப்பு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகளின் உயரதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இந்நிலை தொடர்கிறது.

கட்டணம் வசூலிக்கலாம்: ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், புஜா புஜா பேரூராட்சியில் இதுபோன்ற திட்டம் உள்ளூர் மக்கள் , அதிகாரிகள் பங்கேற்கும் குடிநீர் பராமரிப்பு குழுவினரால் பராமரிக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. அதுபோல பராமரிக்கவோ அல்லது தற்போது பராமரிக்கும் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்து பராமரிக்கவோ அரசு நடவடிக்கை எடுக்கலாம். அல்லது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு போல குடிநீர் வாரியத்திடம் இத் திட்டத்தை ஒப்படைக்கலாம்.

மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மம்சாபுரம் பேரூராட்சி பகுதி மக்களுக்கு நிறுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments