தமிழ்நாடு

செல்லிடப்பேசி சிங்கங்கள்!

தமிழக சட்டப்பேரவையின் 2016ஆம் ஆண்டுக்கான தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராத, சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை அளித்து கோலோச்சிக் கொண்டிருக்கும்

ஆர். முருகன்

தமிழக சட்டப்பேரவையின் 2016ஆம் ஆண்டுக்கான தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராத, சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை அளித்து கோலோச்சிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு "செல்போன் லயன்ஸ்' (செல்லிடப்பேசி சிங்கங்கள்) எனப் பெயரிட்டு, அவர்களை அடித்தளமாக வைத்துத் தனது தேர்தல் வியூகத்தை வகுக்க மக்கள் நலக் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. அதென்ன செல்போன் லயன்ஸ்? புலிகள் என்றோ சிறுத்தைகள் என்றோ வைக்கக் கூடாதா?

தமிழக வாக்காளர்கள் பட்டியலில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 2.88 கோடி ஆண்கள், 2.91 கோடி பெண்கள் என 5.79 கோடிப் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களில் 23 லட்சம் பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த முறை வெளியிடப்பட்ட பட்டியலில் 18 முதல் 19 வயதுக்குள்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 8 லட்சமாக இருந்தது. இப்போது, 16 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 5.79 கோடி வாக்காளர்களில் எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 55 சதவீதம் முதல் 65 சதவீதம் உள்ளதாக மக்கள் நலக் கூட்டணி கருதுகிறது. இதில், 18 முதல் 19 வயதுடையோர், 20 முதல் 29 வயதுடைய இளம் தலைமுறை வாக்காளர்களே தங்களது இலக்கு எனவும் கருதுகிறது.

நடுநிலை வாக்காளர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கக் கூடியவர்கள். குக்கிராமத்தில் சிறு நிகழ்வு நடந்தாலும், அதை சர்வதேச தளத்துக்கு கொண்டு சென்று உடனுக்குடன் விமர்சனங்களைப் பெறும் சக்தியாக விளங்குகின்றனர். இந்தச் சக்தியை நம்பியே களம் இறங்கியுள்ளதாக மதிமுக பொதுச் செயலரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறுகிறார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இன்றைய அரசியல் சூழலில் இளம் வாக்காளர்களிடையே ஒரு தேடல் உள்ளது. செல்லிடப்பேசி வழியாக விரல் நுனியில் உலகளாவிய விவரங்களை அலசி ஆராயும் இளைஞர்கள் மத்தியில், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுத் தேவை என்பது அழுத்தமாகப் பதிந்துள்ளது. இந்த இளைஞர்களை இனி செல்போன் லயன்ஸ் என அழைப்பதே பொருத்தமானது. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது வீதிக்கு வந்து அணி சேர்ந்து களப்பணியாற்றியது இந்த செல்லிடப்பேசி சிங்கங்களே. மேலும், அனைத்துக் கட்சிகளிலும் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 விழுக்காடுதான். மீதமுள்ள 65 விழுக்காட்டினர் எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்கள். அவர்கள் தேர்தலின் போது ஏற்படுகிற உணர்வுகளின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர். இவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய சக்தி, கண்ணுக்குப் புலப்படாத சக்தி இப்போது உருவாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் ஏற்பட்டதில்லை.

இவர்களிடம் எங்களது கொள்கைகளை கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை மாற்றி, தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் என்றார் அவர்.

இனி செல்லிடப்பேசி சிங்கங்கள் செய்யப் போகும் மாற்றம் என்னவோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT