காவிரி ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் சாய, சலவை ஆலைகளை இடித்து அப்புறப்படுத்துவது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது. இத் தொழிலில் ஈடுபட்டுள்ள 1 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் இத் தொழிலையும், காவிரி ஆற்றையும் பாதுகாக்கப் போராடும் ஆர்வலர்கள்.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் பெரும் தொழிலாக இருப்பது விசைத்தறித் தொழில். கடந்த 10 ஆண்டுகளாக மாறிவரும் சந்தை நிலவரம், ஏற்றுமதி குறைவு, மின் கட்டண உயர்வு, தொழில் மந்தம், ஆயத்த ஆடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சென்வாட் வரி, மின் தட்டுப்பாடு, வங்கிகளின் உதவி இல்லாமை போன்ற பல காரணங்களினால், பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி, விசைத்தறித் தொழில், இப்போது சாயப் பட்டறைகளின் மீது அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் மீள முடியாத பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளது.
விசைத்தறி, கைத்தறித் தொழில் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தறிகளும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோரும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். அனுமதிபெற்ற சாய ஆலைகள் சுமார் 125-ம், அனுமதி பெறாத சுமார் 350-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும் உள்ளன. இந்த தொழிலில் நேரடியாக 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் காவிரிக் கரையோரம் ஏராளமான அனுமதி பெறாத சாய, சலவை ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகள் கழிவுகளை காவிரி ஆற்றில் விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. காவிரியில் தண்ணீர் ஓடும் போது, கழிவுகள் அதோடு கலந்து விடுவதால், வெளியில் தெரிவதில்லை.
தற்போது கோடை காலம் என்பதால், காவிரி ஆற்றில் தண்ணீரே இல்லாத வறண்டு கிடக்கின்ற இச் சூழ்நிலையில் சாய மற்றும் கழிவு நீர்களால் ஆற்றில் ஏற்படக்கூடிய மாசால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாத சாய, சலவை ஆலைகளை இடித்துவருகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத சாய, சலவை ஆலைகளை இடித்து அப்புறப்படுத்தி, உரிமையாளர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தினமும் ரூ.10 கோடி இழப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த நடவடிக்கையால் இத் தொழில் முடக்கப்பட்டு, தினமும் 15 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டு, ரூ.10 கோடி அளவுக்கு தொழில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ரூ.300 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார், சாய, சலவை ஆலை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தப் போராடிவரும் தொழிற்சங்க முன்னோடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான எ.ரங்கசாமி.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது, சாயத் தொழிற்சாலைகளை இடித்துத் தள்ளுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இயலாது. இந்த வேகத்தை அரசு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால், இப்படிப்பட்ட சூழ்நிலை வந்திருக்காது. .
தொழில்முனைவோர் அனைவரையும் இணைத்து பொது சுத்திகரிப்பு நிலையத்தை விரைவாக அமைப்பதில் வேகம் காட்டினால் மட்டுமே இத் தொழில் காப்பாற்றப்படும். கடந்த 10 ஆண்டுகளாக சாய, சலவை ஆலைத் தொழிலைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது அனைத்து சாயப் பட்டறைகளும் பூட்டப்பட்டதுதான் மிச்சம்.
சாயப் பட்டறை உரிமையாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சொல்கின்ற நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதென்றால், ஒவ்வொருவரும் சுமார் ரூ.50 லட்சம் செலவிட வேண்டி வரும். சிறு, குறு தொழில் முனைவோர் இதனைச் செய்ய முடியாது.
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியின் பாரம்பரியத் தொழிலான விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்கவும், ஆற்றுநீரையும், மக்களையும் பாதுகாக்க, சாய ஆலைகள் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் அரசு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி, விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.