சிவகிரி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: தாய்-மகள் சாவு
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசு பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்ததில் தாய், மகள் இறந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசு பேருந்து டயர் வெடித்து கவிழ்ந்ததில் தாய், மகள் இறந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
தென்காசியில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். பேருந்து சிவகிரி அருகே உள்ளாறு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்து சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் போதிய மின்சாரம் இல்லாததால் காயமடைந்தவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜாபளையம் அருகேயுள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த ராமராஜ் மனைவி சுப்புலட்சுமி (50), அவரது மகள் தேவி (28) உள்பட 15 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிலருக்கு கால், கை முறிந்தது.
சிவகிரி காவல் ஆய்வாளர் அந்தோணிசெல்லத்துரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீ்ட்டு சிகிச்சை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சுப்புலட்சுமி, தேவி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் காயமடைந்த சுப்பிரமணியன், தேவராஜ், லட்சுமி உள்ளிட்ட 14 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.