கோவை: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மீதான மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கு கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது உள்ளிட்ட சில காரணங்கள் கூறப்படுகின்றன.
இந்தியாவில் பொறியியல், தொழில்நுட்பத் துறை தனது ஆதிக்கத்தைத் தொடங்கிய 1990-களுக்குப் பிறகு பொறியியல், தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் படிப்பதற்கு குக்கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வரத் தொடங்கினர்.
பட்டி தொட்டிகளில் எல்லாம் புதிது புதிதாக பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்பம் படித்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிலும், மருத்துவர்களைக் காட்டிலும் பல மடங்கு சம்பாதிக்கத் தொடங்கியது, பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் மீதான மோகத்தை வெறியாக மாற்றியது. விளைவு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதிலும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 3 மடங்காகவும், மாணவர் சேர்க்கை 4 மடங்காகவும் உயர்ந்தது. கடந்த 2006-07ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் 1,511 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இப்போது 4,270 ஆகவும், 5.50 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 19.03 லட்சமாகவும் உயர்ந்தது.
ஆனால், ராக்கெட் வேகத்தில் இருந்த பொறியியல் மாணவர்கள் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்துக்கு குறைந்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கென 10 அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் 3 கல்லூரிகள், 546 சுயநிதிக் கல்லூரிகள், 17 அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள் என 576 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு அனுமதித்த இடங்கள் 2.93 லட்சம். ஆனால், 2014-15-இல் நிரம்பிய இடங்களோ 1.67 லட்சம் மட்டுமே. குறிப்பாக, 2.78 லட்சம் இடங்களைக் கொண்ட சுயநிதிக் கல்லூரிகளில் 1.26 லட்சம் இடங்கள் காலியாகவே இருந்தன. கடந்த ஆண்டிலும் இதே நிலைதான் நீடித்தது. சுயநிதிக் கல்லூரிகளில் 2.02 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 94 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மாணவர்களைப் பொருத்தவரையிலும் ஆசிரியர் தரம், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே தனியார் கல்லூரிகளின் தரத்தை மதிப்பிடுகின்றனர். இதன் விளைவால் இது மூன்றும் இல்லாத தனியார் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையை இழக்கத் தொடங்கின.
தமிழகத்தில் உள்ள 576 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 150 கல்லூரிகளில் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் சுமார் 60 சதவீத இடங்கள் நிரம்புகின்றன. 150 கல்லூரிகளில் வெறும் 20 சதவீதத்துக்கும் குறைவாகவும், மற்ற கல்லூரிகளில் 40 சதவீதம் வரையிலுமே மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதனால், ஒரு கட்டத்தில் தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்காக கட்டணம் குறைவு, பி.எஸ்ஸி. படித்தால் நேரடியாக 2-ஆம் ஆண்டில் சேரலாம் என்பது போன்ற பல்வேறு புதிய தந்திரங்கள், இலவசங்கள், சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைக் கையாளத் தொடங்கின. இருப்பினும், கல்லூரியைச் சுற்றியுள்ள மாணவர்களும், மதிப்பெண் குறைந்தவர்களும் மட்டுமே அதுபோன்ற கல்லூரிகளில் சேர்ந்தனர்.
ஆனால், பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை கட்டாயம் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் அளித்த உத்தரவால் தனியார் கல்லூரிகளின் அந்தத் தந்திரங்களும் பலிக்காமல் போய்விட்டன. நம் கண் முன்னே உச்சத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகள் இன்று வீழ்ச்சி காணுவதற்கும், அப்படியான தோற்றம் இருப்பதற்கும் கலை, அறிவியல் கல்லூரிகளை காரணமாகக் கூறுகிறார் கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதன்மை நிர்வாகி கே.சுந்தரராமன்.
பொறியியல் கல்லூரிகளில் பல லட்சம் ரூபாய்களைக் கொட்டி நான்கரை ஆண்டுகள் படித்து முடித்தால், நல்ல நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை. காரணம், அதிகப்படியான போட்டிதான். ஆனால், அதேநேரம் ஏதேனும் ஒரு நல்ல கலை, அறிவியல் கல்லூரிகளில் குறைந்த செலவில் 3 ஆண்டுகளில் பட்டப் படிப்பு முடிப்பவர்களுக்கு வளாகத் தேர்வில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கிறது. இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
அதேநேரம், பொறியியல் கல்லூரிகளின் வீழ்ச்சிக்கு அவற்றை தேவைக்கு அதிகமாகத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கிய அரசுகளையும், ஏ.ஐ.சி.டி.இ.-யையும் சாடுகிறார் அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி. "அமெரிக்காவில் நாடு முழுவதிலும் ஓராண்டுக்கு உருவாகும் பொறியாளர்களின் எண்ணிக்கைக்கு சமமான அளவு தமிழகத்தில் உருவாகின்றனர். இது ஒன்றே வேலைவாய்ப்பு கிடைக்காததற்குக் காரணம். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறியதும் மாபெரும் தவறாகும்.
லட்சக்கணக்கில் செலவழித்து, தரமில்லாத பல தனியார் கல்லூரிகளில் மகன்களைப் படிக்க வைக்கும் ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகள், பின்னர் அந்தக் கடனுக்கு வட்டி செலுத்தும் அளவுக்குக்கூட மகனுக்கு ஊதியம் கிடைப்பதில்லையே என்பதை எண்ணி நொந்து போயிருக்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாத, தரமில்லாத 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை எனது பணிக் காலத்தில் மூடி, அதன் தாளாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். சேர்க்கை சதவீதம், ஆசிரியர், மாணவர்களின் தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அளவுகோலாக வைத்து தமிழகத்தில் உள்ள சுமார் 200 கல்லூரிகளை படிப்படியாக மூட வேண்டும். இதனால், அரசுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக, தரமான மாணவர்களால் நீடித்த, நிலையான எதிர்காலம் நாட்டுக்குக் கிடைக்கும்'
என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.