மூன்று தொகுதி வெற்றியின் மூலம் மக்கள் தனது பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தனது பணிகள் எப்போதும் சிறப்புடன் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தொகுதி தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கியிருக்கும் வாக்காளர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சி, உற்சாகம்: மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் எனக்கு நீங்கள் வழங்கியிருக்கும் இந்தத் தேர்தல் வெற்றி எல்லையில்லாத மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. எனது தலைமையிலான ஆட்சியின் சாதனைகளையும், நலத் திட்டங்களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து எனக்கு தொடர் வெற்றியை அளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப எனது பணிகள் எப்போதும் போன்று சிறப்புடன் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பை ஒரு போதும் மறவேன்: நான் விரைவில் பூரண நலம்பெற வேண்டி அதிமுகவினரும், தமிழக மக்களும், என் மீது பேரன்பு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறீர்கள். பலர் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கிறீர்கள் என்பதை நன்கு அறிவேன்.
உங்களுடைய பரிவுக்கு நன்றி. உங்களது பேரன்பை நான் ஒரு போதும் மறவேன். எனது அன்புக் கட்டளையை ஏற்று மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய கட்சியினர், தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.