தமிழ்நாடு

வங்கி முன்பு மக்களை காத்துக் கிடக்க வைத்ததுதான் மோடியின் சாதனை: பிருந்தா காரத்

DIN

கோடிக்கணக்கான மக்களை வங்கி, ஏடிஎம்களில் பல மணி நேரம் வரிசையில் நிற்க வைத்து கருப்பு உலக சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
வி.பி.சிந்தன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் "பாஜக அரசின் பொது சிவில் சட்டமும், கருப்புப் பண ஒழிப்பும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றி, பிருந்தா காரத் பேசியது:-
முதலில் யோகா திட்டம் எனக் கூறி மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை யோகா செய்ய வைத்து, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து முதல் உலகச் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி செய்தார்.
இப்போது, இரண்டாவதாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை வங்கி, ஏடிஎம் வாசல்களில் பல மணி நேரம் வரிசையில் நிற்கவைத்து கருப்பு உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
மத்திய அரசின் சார்பில் 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்தியாவில் உலவுகிற ஒட்டுமொத்த கருப்புப் பணத்தில் 3 முதல் 5 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகவும், பணமாகவும் உலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 95 சதவீத கருப்புப் பணம் சுவிஸ் வங்கியிலும், பிற வெளிநாட்டு வங்கிகளிலும், ரியல் எஸ்டேட் போன்ற மேலும் பிற வடிவங்களிலும் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.
அதுமட்டுமின்றி, காஷ்மீரில் இந்திய எல்லையில் சில தினங்களுக்கு முன்பு இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களை ராணுவத்தினர் சோதித்தபோது, அவர்களின் சட்டை பையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில நாள்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட, புதிய ரூபாய் நோட்டு எப்படி பயங்கரவாதிகளின் கைகளில் இருக்கிறது என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடவடிக்கை, பங்கரவாதத்தையும் கட்டுப்படுத்தாது.
வங்கிகள் மூலமாக பெரு முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட கடனில், 11 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. இவற்றில் விஜய் மல்லையா போன்ற பலரது கடன்களை வங்கிகள் இப்போது தள்ளுபடி செய்து வருகின்றன.
இப்போது, சாதாரண மக்கள் கையில் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை மூலம் வங்கிகள் மீண்டும் வளமடைந்துவிடும். அதன் மூலம், மீண்டும் பெரு முதலாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடியை கடனாக வழங்க வைக்கலாம் என்பதுதான் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் ஒரு நோக்கம்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், தோட்டத் தொழிலாளர்கள், ஜவுளி துறை என 90 சதவீத அமைப்புசாரா தொழிலாளர்களும், ஏழை மக்களும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி, ஏடிஎம் வாசல்களில் வரிசையில் காத்திருந்த மக்களில் 71 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்தியாவில் 3 சதவீதம் பேர் மட்டுமே மின்னணு பணப் பரிவர்த்தனை, பண அட்டைகள் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள மக்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனைகளையே பயன்படுத்துகின்றனர்.
எனவே, நிலைமை சீரடைகிற வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக-வும், ஆர.எஸ்.எஸ். அமைப்பும் எவ்வளவு கருப்புப் பணத்தை செலவழித்தார்கள் என்பதை நாடறியும்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மேலும் விவரங்களை நீதிமன்றம் கேட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பிர்லா, சஹாரா ஆகிய இரு நிறுவனங்களில் வருமான வரி தொடர்பான சோதனையை சிபிஐ மேற்கொண்ட போது, அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பான பட்டியல்களிலும் குஜராத் முதல்வர் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
அதாவது 2013-இல் குஜராத் முதல்வருக்கு சாஹாரா நிறுவனம் சார்பில் ரூ.55 கோடியும், பிர்லா நிறுவனம் சார்பில் ரூ. 25 கோடியும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2013 இல் குஜராத் முதல்வராக யார் இருந்தார் என்பதை மக்கள் அறிவர்.
எனவே கருப்புப் பணம் குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT